Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !

2 comments
பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன
பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ?
அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.
ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.

1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள். முக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்

2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா ? நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா ? இவையெல்லாம் பொய்யின் குழந்தைகள்.

5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.

6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.

7. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.

8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.

9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு.

ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.மேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது.

அன்புடன் தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. Anonymous8:16:00 am

    நன்றிகள் நண்பா

    ReplyDelete
  2. நன்றி உங்கள் கருத்துக்கு.. நண்பர்களே

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா