Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கவிஞர் தா. இராமலிங்கம்

4 comments

தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியிற் கல்வி பயின்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி பட்டதாரியானார்.
கல்விப்பணி

பின்னர் 1959-1968 காலப்பகுதியில் இரத்தினபுரி பரிலூக்கா கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். அதன் பின் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக பணியாற்றி, தனது ஆசிரியப்பணியில் கால்நூற்றாண்டு காலத்தை மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அவர் கல்விப்பணியிலிருந்து 1993ல் இளைப்பாறிக்கொண்டார்.

கவிதைத்துறையில்..

வித்தியாசமான பாணியில் புதுக்கவிதை எழுதிய ஈழத்து எழுத்தாளர். 1960களில் எழுதத் தொடங்கிய இவர் ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இராமலிங்கம் அவர்களுடைய முதலாவது கவிதைத் தொகுதியான புதுமெய்க் கவிதைகள் 1964இல் வெளியானது. 1964 இல் இரத்தினபுரி பரிலூக்கா கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் தான் இது வெளியானது. 38 கவிதைகளை உள்ளடக்கி இருந்தது.

அடுத்த வருடமான 1965இல் காணிக்கை என்ற அவருடைய இரண்டாவது தொகுப்பு வெளியானது. இது 31 கவிதைகளுடன் வெளிவந்தது. தமிழ் சமூகத்துள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் போலியான சம்பிரதாயங்களையும் மிகுந்த நேர்த்தியோடு கவிதையாக்கியவர்.

இதனைத்தவிர “மரணத்துள் வாழ்வோம் , பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் போன்ற தொகுப்புக்களுக் கூடாகவும் அலை, புதுசு, சுவர் போன்ற சஞ்சிகைகளுக்கூடாகவும் இவரின் கவிதைகள் வெளியாகின.

தனிப்பட்ட வாழ்க்கை 

1959 ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவரின் மனைவி மகேஸ்வரி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். தனது மகன் ஒருவரின் அகால மரணத்தினால் எழுத்துலகத்தை விட்டு சிறிது காலம் விலகியிருந்தார். பின்நாளில் சுகயீனம் காரணமாக கிளிநொச்சியில் ஆகஸ்ட் 25, 2008 இல் காலமானார்.


இவரின் நூல்களை பார்வையிட...


புதுமெய்க் கவிதைகள் - நூலகத் திட்டம்
காணிக்கை - நூலகத் திட்டம்

அவரது கவிதை சில உங்களுக்காக...

பலி

நேற்றுக்
கன்றீன்ற மாடு!
மடியினைக்
காகம் கொத்தித்
துவாலை இறைக்கிறது!
பாவம்!
வாயில்லாச் சீவன்
சுற்றிவரக் காகம்.
எழும்பு!
ஒன்று பிடி! கொல்லு!
செட்டை உரி! தூக்கிவிடு!
பால் கறக்க முடியாமல்
பாழ்பட்ட காகம்
அநியாயம் பண்ணுகுது!

யார் உதவி எங்களுக்கு?

தாலிதான் பேருக்குக்
கழுத்திலே தொங்குகுது
பெற்ற பொழுதே, மகளே,
உன் தகப்பன்
விட்டுவிட்டு ப போய்விட்டான்?

நான் பட்ட பாடு!

கொதித்துப்
பொங்கி எழும் பாலை
உலைமூடி என்ன செய்யும்?
அகப்பையாற் துழாவி
அடக்கி நான் ஆறிவந்தன்.

வயிறுகட்டி வாய்கட்டி
ஆடியாடி அச்சுலக்கை
ஈடாடிப் போச்சு!
குப்பை மயிர் கொட்டுண்டு
குரும்பட்டி என் குடும்பி!

நான் பட்ட பாடு!

பெரியபிள்ளை ஆனாய் நி!

ஆபத்து நெருப்பு என்றார்.
ஓலைக்குடிசை!
பொறிபட்டால் போதும்,
கோடை வெயிலில்
மிளாசி எரியுமென்றார்.

ஓர்இரவு நள்யாமம்:
வீட்டுக் கோடியிலே
மெதுவாய் அடிவைத்தல்
கேட்டுநான் போய்ப் பார்க்க,
பனங்காயை நாம்பன்
பிய்த்துத் தின்னுகுது!

இனிக் காவோலை காற்றில்
சல சலத்தாலும்
கண்ணுறங்க முடியாமல்
கலங்கி யெழல் வேண்டுமெனப்
பெருமூச் செறிந்து

சுருங்க வழியில்,
வரன் தேடிக்
குறுக்குவழி நடந்துவிட்டன்;
இறந்துவிட்டாய்!
என் மகளே,
சாகும்போது என்னைச்
சபித்துப் புலம்பினையோ?

முதல் இரவு:
நாணம் உரித்துவிட்டுச்
சுளை தின்னத் தெரியாது,
கசக்கும் என அறியான்
தோலோடு சப்பிவிட்டான்!
பூட்டைத் திறப்பதற்குத்
திறப்பினைத் தேர்ந்தெடுக்கான்
இடித்துப் பிளந்துவிட்டான்
இரத்தம் கசிந்ததம்மா!

மறு இரவும்
முதல் இரவின் துன்பிய

என்ன அநியாயம்!
கொத்திய புண்மீது
மீண்டும்,
கொத்துவதோ காகம்!
எழும்பு!
ஒன்று பிடி! செட்டை உரி!

அய்யோ!
துடி துடித்தாள்!
பெரும்பாடு இறைக்காதோ எனப்
புலம்பித் தவங் கிடந்தாள்.
ஓமக் கிடங்கில் தீ
சுவாலைவிட்(டு) எரிகிறதே!
ஓமக் கிடங்கில் தீ
சுவாலைவிட்(டு) எரிகிறதே!

ஓலையிலே படிந்த
இரத்தக் கறை சாட்டாய்ச்
சூதகம் எனக் கூறி
மூலையிலே,
கரிக்கோடு கீறித்
தனக்கு
வேலி அடைத்தனளே!

மூன்றாம் நாள்:
மூடு பனி! எடு போர்வை! என்ன,
படு ஈரம்! உதவாது! என்ன,
முறுக்கிப் பிழி! சற்று விரி!
உலர்ந்துவிடும்! என்ன,

சம்மதிக்கவில்லை மகள்;
சண்டை தொடங்கிற்று!
என் மகளே,
சாகும்போது என்னைச்
சபித்துப் புலம்பினையோ?
புழுக் குத்தாப் பொன் மேனி
அணுவணுவாய்ப்
பிய்த்துப் பிடுங்குவதோ?

துள்ளாற் கன்றென்றும் பாராது
கடிநாய்,
விட்டுத் துரத்திப்
போட்டுப் பிடுங்குகுதே
சிக்! அடி நாயை!!

எங்களுக்கு யார் உதவி?

உயிர்வாழ முடியாமல்
இப்படியும்
அநியாயம் பண்ணிறதோ
அகால மரணங்கள்

வெள்ளென வெல்லாம்
வெறிச்சோடிக் கிடந்து
வெறுஞ் சாம்பல் மேடாய்த்தான்
தரிசனம் தந்தது.

மதியம் திரும்பியதும்
கட்டை அடுக்கிவிட்டுக்
காத்துக்டி கிடக்கின்றார்.

நீறு பூத்த குறங் கொள்ளிக் கட்டைகள்
காற்டிறு ஊத கண் முழித்துப் பார்க்குது!

இப்ப வெல்டிலாம்
அகால மரணந்தானே அதிகம்.
ஒருவேளை
கைகூடாத் திருமணத்தால்
காதலர் தற்கொலையோ
சாதி மத பேதம் தடுத்த
கொடுமையிதோ!
அதோ பார்!
துண்டுப் பிரசுரம் தெருவெல்லாம் ஒட்டி
தண்டிகை காவிச் சனம் திரண்டு வருகுது

"குண்டு துளைத்துக்
குருதி குளிப்பாடிச்
சவமாகச் சாய்ந்தாலும்
சாகாமல் வாழுகிறாய்
விடுதலை வேள்வியிலே உடல் தீக்கு ஈந்துவிட்டாய்..."

ஒரு கோடி சிந்தனைகள்
உள்ளத்தில் அலைமோத
மீதியைநான் படிக்கவில்லை.
இப்பவெல்லாம்
அகால மரணந்தானே அதிகம்


நன்றி- இணையம் 


அன்புடன் sTn
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

 1. saravanapavan9:33:00 pm

  நம்மவர் என்னும் பகுதியில் நீங்கள் பதிவிடும் நபர்கள் பலர் அறியாதவர்கள், சிலர் மறக்கப்பட முடியாதவர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நன்றிகள் தோழரே...

  ReplyDelete
 3. unmaiyile sirantha kalvimaan

  ReplyDelete
 4. நன்றி அன்பு உள்ளங்களுக்கு...

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா