Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பொங்கல்

4 comments

பொங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள்.
நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன் , உதவிய கால்நடை, மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை போன்றன அடங்கும். நாங்கள் சிறப்பாக கொண்டாடுவது சூரியபொங்கலாகும்.

இன்று முத்தத்தில் பொங்கும் முறை அருகிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். மக்களின் வாழ்க்கைமுறை இயந்திரமாக மாறிவிட்ட நிலையில் இது சாத்தியம் ஆகவில்லை. தொடர்ச்சியாக நகரத்து வாழ்க்கை, நாகரிக மோகம், என பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். நன்றி என்பது மறுக்கப்படமுடியாத ஒன்று. அந்த நன்றியை, பூமி, சூரியன், மாடு / கால்நடைகளுக்கு செலுத்த தான் வேண்டும். 

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். இது வழமையான ஒன்று தான். இருந்தாலும் அந்த சந்தோசத்தை ஏழைகளுடன் பகிர்ந்தால் என்ன?. இத்தனை செலவில் வெடிகளை கொளுத்தி ஏற்படும் சந்தோசம், ஏழையின் சிரிப்பில் இரட்டிப்பாக கிடைக்கும் ஒருமுறை அனுபவித்து பாருங்களேன். எனது இன்றைய இரவு இன்னொரு போர்கால சூழலை நினைவு படுத்துகின்றன. சரி விடயத்துக்கு வருவோம் 

தமிழர் பண்பாட்டில் கோலம் 

இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மண்ணினாலோ அல்லது அலுமினியத்தினாலோ உருவானதாக இருக்கும். அதைவிட மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் மூன்று கல் அடுக்கி, பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் அன்று பயன்படுத்துவர். 

தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும்வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது 

இன்றைய சமூகத்தினருக்கு கோலம் போடுதலோ, பொங்கல் செய்தலோ அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, நவீன யுகத்தில், கிராமங்களில் கூட கோலம் போடும் முறை அருகிவிட்டது. கோலம் போடுதலின் உண்மையான நோக்கமும் எல்லோருக்கும் புரியவும் வாய்ப்பில்லை.
வீட்டுவாசலில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே பெருக்கிச் சுத்தப்படுத்தி, சாணம் தெளித்து, மெழுகி கோலமிடவேண்டும். கோலங்கள் அரிசிமா, மஞ்சள், முருகைக்கற்பொடி, ஓட்டுத்தூள் போன்ற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கெனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். கோலங்கள் பல்வேறு வகையாக வரையலாம். பொங்கலுக்கு சாதாரணமான கோலமே போதுமானது. 

இவற்றில் அரிசி மா கொண்டு போடுதல் தான் உண்மையிலே சிறந்த ஒன்று. காரணம் எறும்பு போன்ற சிறிய உயிர்கள் கூட அதை உணவாக எடுத்துக்கொள்ளும். பொங்கல் செய்யும் முறையையும் ஒருமுறை பார்த்துவிடலாம்.

சக்கரை பொங்கல் செய்யும் முறை

தேவையான பொருட்கள்:
 • பச்சரிசி – 1/2 கிலோ
 • பாசிப்பருப்பு/ பயறு  – 200 கிராம்
 • சக்கரை – 1 கிலோ
 • பால் – 1/2 லிட்டர்
 • நெய் – 100 கிராம்
 • முந்திரி – 100
 • சுக்கு – சிறிது 
 • ஏலக்காய் – 10
 • தேங்காய் – 1 
முதலில் செய்யவேண்டியவை:
அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை/பயறு ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை(பயறு) சேர்த்து நன்கு வேகவிடவும். அரிசியும், பயறும் நன்கு வெந்ததும் அதில் சக்கரையை சேர்த்து  நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.

தேங்காய்த்துருவலை விருப்பபட்டால் சேர்க்கலாம், விரும்பாதவர்கள் விடலாம்.

மீண்டும் எம் தமிழ் பண்டிகையை கோலம் போட்டு, பானையில் பொங்கி கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் -sTn-
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

 1. Happy Pongal thamilnila

  ReplyDelete
 2. பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. @உயிரே..நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா