Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சலூன் கடை சண்முகம்

1 comment

கிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இப்ப இருக்கிறமாரி சட்டங்களும் இல்ல. 2000 ஆண்டுக்கு பிறகு இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமா மாறிவிட்டது எண்டு தான் சொல்ல வேணும். சட்டங்களும் கூடவே புதிதாக உருவாகி இருக்கு.

இப்படித்தான் நாங்கள் இடம் பெயர்ந்து  இருந்த காலம். கரணவாய் எண்டுறது நாங்கள் இருந்த ஊர். வடமராட்சில பிரபலமான கரவெட்டியில இருக்கிற ஊர் அது. அங்க சண்முகம் எண்டு ஒரு ஆள் வருவார். அவர் தான் ஊரில இருக்கிற குழந்தைகளுக்கு மொட்டை போடுறது. பெடியள் முதல் தாத்தாமார் வரை முடி வெட்டி சேவிங் செய்யுற வரை எல்லாருக்கும் அவர் தான். அந்த ஊருக்கு மட்டும் இல்ல சுத்தி இருக்கிற சில ஊரும் அந்த நேரம் அவற்ற கொன்றோலுக்க தான்.

சண்முகம் எண்டுறது பேர் ஆனால் ஊரில அவரை சண்ணுவம் என்று தான் சொல்லுவினம். மூத்தவை சொல்லி மருவிடிச்சு. எங்கட  வீட்டுக்கும் அவர் தான் வந்து முடி வெட்டுறது. பத்து வயசு இருக்கும். அப்ப எல்லாம் தலைமுடில இருந்து கால் நகம் வரை எப்படி இருக்கவேணும் அல்லது எப்ப வெட்டவேணும் எண்டு முடிவெடுக்கிறது அப்பா. பிறகு எல்லாம் மாறிட்டுது அது வேற கதை,

அப்பா அம்மாட்ட சொல்ல, அம்மா ஐயாட்ட சொல்ல, ஐயா யாற்றையாவது வீட்டுக்கு வந்திருந்தா நாளைக்கு எங்களுக்கு எண்டு புக் பண்ணுவார். இல்லை என்றால் வீதியால போகும் போது கூப்பிட்டா வருவார். "சண்ணுவம் நாளைக்கு வரும்" எண்டு கதை முடியும். 

சண்ணுவம் எப்படி எண்டா, கொஞ்சம் கறுப்பு, தடிச்ச ஆள், வெறும் மேல், சாரம், வண்டில கட்டினபடி ஒரு பெல்ட், சைக்கிள், சைக்கிள்ள ஒரு பை. அதுக்க தான் அவற்ற ஆயுதங்கள். வந்து சைக்கிள விட்டா வீட்டின்ர பின்பக்கம் கூட்டிப் போகவேணும். ஒரு வாளி தண்ணீர், அவ்வளவு தான்.

கதிரை எல்லாம் இல்லை இரண்டு பேரும் குந்தி இருக்க வேண்டியது தான். ஏசி இயற்கையானது. வானம் பார்த்த சலூன் எண்டு சொல்லலாம்,  தண்ணிய தலைல தெளிச்சு, சீப்பையும் கத்தரிக்கோலையும் எடுத்தால், அந்த வீட்டில எல்லாருக்கும் வெட்டித்தான் பைல வைப்பார். இப்ப இருக்கிறமாதிரி கண்ணாடியும் இல்லை. அது அவர் நினைக்கிற படி தான். அப்ப சவரக்கத்திக்கு பிளேட் மாத்திற பழக்கமில்லை எண்டு தான் சொல்லவேணும். காது பக்கத்தால வளிச்ச இடம் எரியும், தீட்டித் தீட்டி தேஞ்சு போன கத்தி, சண்ணுவம் கொண்டுவாற வெள்ளை கல்லு தான் அதுக்கு தீர்வு, இப்ப அஃபிடர்  ஷேவ் பூசுறமாதிரி.

இதுக்கு முதல் சாவகச்சேரியில எங்கட வீட்டுக்கு கிட்ட ஒரு சலூன் இருந்தது. "தேவா சலூன்" மரக்கதிரை, சிவப்பு குசன் சீற், முன்னால கண்ணாடி, சின்னப்பிள்ளைகளுக்கு என்று கதிரைன்ர கைகளுக்கு நடுவ ஒரு பலகை போட்டிருக்கும். அதில ஏறி இருந்து வெட்டின எங்களுக்கு இது புதுசாவும் வித்தியாசமாயும் இருந்திருக்கும்.  இப்ப அது சுத்திர கதிரை, ஏசி, மெஷின் கட்டர், மாசாஜ் அப்படி இப்படி எண்டு எல்லாம் மாறிடுச்சு, ஆட்களும் தான், முந்தி வேட்டியோட நிண்ட தேவா அண்ணையே இப்ப  ஜீன்ஸ்ஸோட தான் நிப்பார்,

எது எப்படி என்றாலும் என்ன வெட்டினாலும் எங்க வெட்டினாலும் எப்ப வெட்டினாலும், வெட்டு ஸ்டைல் ஒன்று தான், அப்பா சொல்லுற சொல்ல சலூன் கடைக்காரரும் கேட்க்காம விட்டதில்லை, "சோர்ட் டா வெட்டி விடுங்கோ...". பாக்க ஏலாது. அவர் வெட்டி முடிய தான் தலைல என்ன இருக்கு எண்டு விளங்கும். இப்பவும் அதே வெட்டு தான், ஆனால் "மீடியம் சோர்ட்".

சண்ணுவதார்  விலை எண்டுறது நாலு ஐந்து பேருக்கு வெட்டினா தான் நூறு ரூபா. எனக்கு அம்மா சொன்ன கதை ஞாபகம் வருகுது. தொண்ணூறாம் ஆண்டு எனக்கு மொட்டை வழிக்கும் போது அரிசி சாமன் தான் குடுத்ததாம். ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு பொருள் இருக்குமாம். வெங்காயம், பனங்கிழங்கு, பனங்கொட்டை, காய்கறி, அரிசி, உப்படி பல. அது பண்டமாற்று காலம் தானே, பாண் விலையை நினைச்சாலே உங்களுக்கு விளங்கும், ஆரம்பத்தில ஒன்று இரண்டுல ஆரம்பிச்சு பிறகு ஐந்து பத்து என்றாகி இப்ப இருநூறு.

முகத்தை நிமிர விடாமல் பிடரியில் கை வைத்து அழுத்தினபடி ஒரு பிடி வெட்டி முடிச்சுடுவார். பிறகு முழுக்கு. 

முழுக்கும் அந்த காலத்தில தண்ணி பம்பிலை தான். சிலர் தோட்டத்தில குளிச்சிருப்பீங்க,  சின்ன வயசு முழுக்குகளை யாரும் மறந்திருக்கவும் மாட்டீங்கள். ஷாம்பூ இல்ல, தேசிக்காய தேச்சு சீயக்காய் வச்சு முழுகுவம். இந்த ஷாம்பூ பாவனைல தானோ என்னவோ, எனக்கு பாதித்தலை முடி நரைத்து விட்டது. முழுகினால் வீட்டில நல்ல சாப்பாடு வரும், அப்படி கிராமத்துக்குக் கதைகள் ஆயிரம்,

யாரிடம் வேணுமெண்டாலும் பகைய வச்சுகலாம் சலூன் கடைக்காறறிட்ட வச்சுக கூடாது. களுத்துல கத்திய வைச்சு ஒரு ரீவிய போட்டுவிட்டுட்டு அத பாக்கவிடாம இவை பண்ற அலப்பறை இருக்கே. ஐயையோ.  சில நேரம் பாட்டு, நல்ல பாட்டு போகும் போது தான்  கதையளை கேப்பினம், கத்திப் பயத்தில பல கதைகளை சொல்லி விட்டு தான் எழும்பி வரவேணும். இந்த உதயன் வலம்புரி பேப்பரை விட கனக்க கதை தெரியும். அவை ஒரு திறந்த புத்தகம், எல்லாத்திலையும் கொடுமையான விடயம் சலூன் கடையில முடிவெட்டும் போது மூக்கு அரிக்கறது தான். சொறியவும் ஏலாது, பேசாம இருக்கவும் ஏலாது.

நமக்கும் பொன்னாடை போத்துராங்க எண்டு சந்தோசப்படும் போதே, தண்ணிய முகத்தில அடிக்கிறாங்க, தெளிவா இருக்கிறவன் முகத்தில கூட தண்ணியை தெளிக்கிற ஒரே இடம் எங்கட சலூன் கடை தான், வெட்டி முடிய தோள்ல விழுந்த முடியை தட்டி விடுறாங்களா, இல்ல எழுந்து போனு துரத்திவிடுறாங்களானு புரியல. அப்படி ஒரு உபசரிப்பு. எனக்கு ஒவ்வொரு முடி வெட்டல் நாட்களும், எங்க கிராமத்துக் காலத்தை நினைவு படுத்தியே செல்லும். எப்போதும் அந்த வானம் பார்த்த  சலூன் ஞாபகங்கள் இருக்கும்.

-தமிழ்நிலா-

Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா