Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

மண்ணென்னை விளக்கின் கதைகள்,

2 comments

முந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் "லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் " எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இடமும் தான். அப்ப உந்த சண்டை நேரம் கரண்ட் எப்ப நிக்கும் எண்டு தெரியாது, மாறி மாறி ட்ரான்ஸ்போமெருக்கு அடி விழுறதால திடீர் எண்டு கரண்ட் நிக்கும். அதனால அந்தக் காலத்தில் மின்சாரம் மீது முழு நம்பிக்கை வைக்காமல் மண்ணெண்னை அரிக்கேன் லாம்பினை அருகில் வைத்துக் கொள்ளுவார்கள்.

எங்கட வீட்டில இரண்டு விளக்கு தான் வீடு முழுக்க வெளிச்சம். ஒன்று படிக்கிற மேசைல, இன்னொன்று வெளில சாப்பிடுற இடத்தில இருக்கும், இந்த இரண்டையும் விட, குசினிக்க பித்தளைல செய்த விளக்கு ஒன்றும் இருக்கும். எத்தனை விளக்குகள் இருந்தாலும் எல்லாத்துக்கும் மூலம் மண்ணெண்னை தான், மண்ணெண்னை வித்த விலையில இதுகளை விடிய விடிய எரிய விடுறது எண்டுறது பெரிய விஷயமா தான் இருந்திருக்கும் அந்தக்காலத்தில இருந்தவைக்கு, சரி அந்த காலம் எண்டு நான் சொல்லுறது  90களின் கதைகள், இப்ப போனும் பேஸ்புக்குமா இருக்கிறோம், அப்ப பெரும்பாலான ஆண்களின் பிரதான வேலை சிமினி துடைக்கிறதும், மண்ணெண்னை விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் திரி போடுறதும் தான். வேலை முடிச்சு வீட்டை வாறவையின்ர அன்றாட கடமைகளில் இதுவும் ஒன்று என்றும் சொல்லலாம். 

அரிக்கன் லாம்பு
பேப்பர் அல்லது துணியால முதல்நாள் மண்டிப்போய்க்கிடக்கும் கரிப்புகையை துடைச்சால்தான் வெளிச்சம் வரும், சிமினி மினுங்கவேணுமெண்டால் திருநீறோ, பற்படியை வைத்தோ மினுக்க வேண்டும். திரி கட்டையானால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் தான் வேலை. அரிக்கன் லாம்புக்கு திரி கடைகளில விப்பாங்கள். மற்ற விளக்குகளுக்கு நங்கள் தான் தயார் பண்ணவேணும். மற்ற விளக்கு என்று சொல்லுறது என்ன என்று தொடர்ந்து வரும் யோசிக்கவேண்டாம்.

நிவாரணத்திற்கு சங்கங்களில் தாற பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ சங்கக்கடைகளில் குறித்த அளவுகளில் தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. குடும்பக்காட்டோட லைன்ல நிண்டு வாங்கிய அனுபவம் உங்களில் பலபேருக்கு இருக்கும், குறைஞ்சது அம்மா அப்பாவோட என்றாலும் போயிருப்போம். ஊர்ல கடைகளில் லீடர் முன்னூறுக்கும் போன வரலாறும் இருக்கிறது. மண்ணெண்னை முந்தி நீல நிறத்தில இருக்கும், இப்ப சிவப்பா மாத்திப்போட்டங்கள். எண்ணெய் முடியும் போதோ அல்லது விடிஞ்சாப்போல லாம்பை நூர் என்று அம்மா சொல்ல ஓடிப்போய் ஊதும் போது பொக்கடிச்சு நூர்ந்து போகும் அந்த விளக்கு

அநேகர் வீட்டில் இந்த அரிக்கன் லாம்பு இருந்தாலும், முந்தி ஜாம் போத்தல் விளக்கு இல்லயெண்டால் குப்பி விளக்கு கட்டாயமா இருக்கும். போத்தலும், சைக்கிள் டியூப் வால்கட்டையும் துணியும் தான் மூலதனம். மண்ணெண்ணெய் இல்லாது விடின் சிலர் தேங்காய் எண்ணெய் பாவிப்பார்கள், விளக்கு ரெடி. பாதுகாப்பு இல்லை, பனை ஓலை வீடுகள், மண்வீடுகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கும். படிக்கிற பிள்ளையளின்ர கொப்பிகள் எரிந்திருக்கின்றன, தலைமாட்டில வச்சு படுத்து தலைமயிர் எரிந்த வரலாறுகளும் அந்த காலத்தில நிறையவே இருக்கிறது.

ஜாம் போத்தல் விளக்கு 
எது எப்படியாக இருந்தாலும் பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான பவர் கட் அல்லது எங்கயாவது இயக்கம் அடிக்க போயினம் என்றால் கரண்ட் இருக்காது. அப்படி மின்சார வெளிச்சம் இல்லாத அன்றைய நாட்களில் வீடுகளிற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தவை இவைதான். 

ஜாம் போதல் விளக்கு என்பது பெரிதாக ஒன்றும் இல்லை, பாணுக்கு ஜாம் பூசி சாப்பிட்டிருப்பம், அந்த போத்தலை எடுத்து அதுல, சைக்கிள் கம்பியை வளைத்து வைத்து, மேல சைக்கிள் டியூப்பில இருக்குற வால்கட்டையை பொருத்தி செய்வார்கள், அதனூடே திரியை செலுத்தி, எண்ணெய் விட்டு கொளுத்தினால் எரியும். நீண்ட நேரம் நின்று எரிய என்று உள்ளே பஞ்சு வைப்பார்கள். அந்த நேர பெட்டிக்கடைகளின் போக்கஸ் லைட்  இந்த ஜாம் போத்தல் விளக்கு. தருமு மாமாவின்ர கடைக்கு தீப்பெட்டி வாங்க பின்னேரங்களில் ஒருநாள் போகும் போது தான் முதல்முறை பார்த்தேன், மேசையில் அடுக்கி வைத்திருக்கும்  தோடம்பழ டோபி கண்ணாடிபோதல்களினுடே பார்த்தால் வெளிச்சம் அவ்வளவு அழகு.

குப்பி விளக்கு 
குப்பி விளக்கும் அப்படி தான், மருந்து/டொனிக் வாற போத்தலின்ரை மூடியிலை சைக்கிள் வால்கட்டையின்ரை இரும்புப் பகுதியை எடுத்து அது போகுமளவிற்கு அந்தப் போத்தல் மூடியில் ஓட்டையைப் போட்டு, அதன் மேல் வால்கட்டை பொருத்தி, அதற்கு ஊடாகத் திரியைப் போட்டு இந்தக் குப்பி விளக்கினை உருவாக்கி இருப்பார்கள். இந்த வகை விளக்குகளை கன நேரம் எரியவிட ஏலாது, போத்தல் சூடாகி வெடித்துவிடும். வெளிச்சம் குறைய திரி தீண்டவேண்டும், திரிதீண்டி என்று இதில் ஒன்றும் இருக்காது, சட்டை ஊசிவைத்து மேலே இழுக்கவேண்டும். இந்த அனுபவம் எங்கள் அம்மம்மா வீட்டில் கிடைத்தது. எனக்கு மட்டும் அல்ல அந்நாட்களில் வாழ்ந்த அனைவருக்கும் கிடைத்திருக்கும்.

எப்படியும் கடைசி தலைமுறை கண்டிராத இந்த விளக்கு அனுபவங்கள் மறக்கமுடியாதவை மட்டும் அல்ல, எங்களுக்கு இனிமையானவையும்தான்.  
பள்ளிக்கூடத்தில பக்கத்தில இருக்கிற நண்பன் அல்லது நண்பியின் கொப்பிகளில் வரும் மண்னெண்ணை வாசம் எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். உறவினர் வீடுகளுக்கு போகும் போது வரும் மண்ணெண்னையின் வாசம் இன்னும் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

விளக்கில் படிக்கும் போது நாங்கள் நிறைய வேலைகள் அல்லது விளையாட்டுகள் செய்திருப்பம், எனக்கு இப்போது நினைவில் இருப்பது என்னெண்டால் கொப்பி பேப்பர கிழிச்சு அதை சுருட்டி, நெருப்பில பிடிச்சு அதை சுருட்டு போல வைத்து புகை விட்ட ஞாபகங்கள், பறக்கும் ஈசல் முட்டிவிடாமல் அதை கலைத்தநாட்கள், முடிந்த பேனைக்குச்சியை நெருப்பில் உருக்க அது சிமினியில் பட்டு அப்பாவிடம் பேச்சு வாங்கிய நேரங்கள். குப்பி விளக்கின் எரியும் நெருப்பில் கைவிரலை வேகமாக ஆட்டிவிட்டு சுடவில்லை என்று தம்பியிடம் கூறி,  அவனுக்கு சுட சிரித்த பொழுதுகள், கொப்பியை மேலே பிடிக்க அதன் மேல் படியும் புகைக்கரியினை சுற்றி இருப்போருக்கு பூசிவிட்டு தப்பி ஓடி விளையாடுவது, இப்படி ஏராளம் உங்களுக்கும் இருந்திருக்கும்.

இப்போது  இதன் தேவை குறைந்திருந்தாலும், அந்தநேரத்து வெளிச்சம் பரப்பி இந்த விளக்குகள் தான். எங்காவது காண கிடைக்கும்போது அந்த பழைய ஞாபகங்கள் சந்தோசத்தை தர தவறுவதே இல்லை,

ஆனால் அப்பா இப்போதும் எண்ணெய் விட்டு, திரி போட்டு சிமினி மினுங்க துடைத்து வைத்திருப்பார்.

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. இதைப்போலவே 2005, 2006, 2007, 2008 காலங்களில் Field bike ரோந்துகள், அதை நிமிர்ந்து பார்க்கக்கூட அஞ்சி குனிந்த தலையுடன் செல்லும் இளைஞர்கள்,வயதானவர்கள், கெடு பிடிகள், தினமும் கேட்கும் Field bike சத்தமும் அதனைத்தொடர்ந்து கேட்கும் துப்பாக்கி சத்தமும், யாரைப்போட்டுத்தள்ளி இருப்பாங்கள் என எண்ணுவதும், இளைஞர்களை வீட்டிற்குள் பொத்தி ஒளித்து வைத்த காலங்கள், Pass or permit (சரியா தெரியல) பெறுவதற்கு எம்மவர் பலரை அநியாயமாய் காட்டிக்கொடுத்த எம்மவர்கள், இவற்றைப்பற்றியும் எழுதுங்கோ அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஞாபகம் இருக்குறது, உண்மை தான், எழுத முயற்சிக்கிறேன்.

      Delete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா