Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

காய்ச்சலும் பனடோலும் - புளிக்கஞ்சியும் அம்மாவும்

Leave a Comment

முந்தி காய்ச்சல் வாறது எண்டுறது சர்வசாதாரணம், எக்ஸாம் வருது எண்டாலோ அல்லது மாணவர் மன்றத்தில ஏதும் செய்யவேணும் எண்டாலோ கூடவே காய்ச்சலும் வரும். பள்ளிக்கூடத்தில காய்ச்சல் வரப்பண்ணவே ஐடியா எல்லாம் போட்டிருக்கிறம். ஏன் எண்டால் அம்மா தொட்டுப்பாக்கும் போது சுடவேணும்.


காய்ச்சல் வர பண்ண என்னடா செய்யலாம் என்றால் நண்பன் சொன்னான் "வெங்காயத்தை உரிச்சு கமக்கட்டுக்க வைச்சா வரும்" எண்டு சொல்லி, அதை நம்பி நான் உரிச்சு வைச்செல்லாம் பாத்திருக்கிறேன். அளவுக்கு அதிகமா குளிக்கிறது, வெய்யிலுக்க நிக்கிறது இப்படி எல்லாம் செய்தும் பாத்திருப்பம். 

"வகுப்புல காய்ச்சல் வந்தது ரீச்சர் நாளைக்கு வரவேண்டாம் எண்டு சொன்னவா", எண்டு அம்மாட்ட சொல்லும் போது 

"சரி இண்டைக்கு நில்" என்று அம்மா சொல்லி விட்டால் சந்தோசம் தான். அதிகமான நாட்களில் காய்ச்சலை காரணமாக கொண்டு இப்பவரையும் வீட்டில நிண்டிருப்பம். 

இல்லாட்டா கலியாணவீடு கோவிலுக்கு போக லீவு எடுத்து காய்ச்சல் எண்டு கடிதம் எல்லாம் எழுதி போயிருக்கலாம். எப்படியோ காய்ச்சல் எங்கட வாழ்க்கையில ஊறிப்போய்விட்டது. அதானால் தான் என்னவோ இப்ப அடிக்கடி காய்ச்சல்,

காய்ச்சலின் கொடுமையை இப்படி இலகுவாக சொல்லி கடக்கமுடியாது. காய்ச்சல் வந்தாலே உடலை சோர்வாக்கி ஆளை படுக்கையில போட்டுவிடும். உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு வருத்தமோ நோயோ அல்ல. அது உடம்பில் ஏற்படும் திடீர் மாற்றம் எண்டு தான் சொல்லவேணும். நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியில் இருந்து வரும் கிருமிகளுக்கும் இடையில நடக்கும் உச்ச சண்டையின் விளைவே அது.

இந்த சண்டையின் அளவு அல்லது தன்மையை பொறுத்து உடலின் வெப்பம் கூடிக்குறையும். மிகப் பெரிய பெரிய போராட்டமாய் இருந்தால் உடலின் வெப்பம் கூடிப்போகும். 100க்கு மேல அடிக்குது எண்டு சொல்லுவினம். அதை தான் காய்ச்சல் கொதிக்குது எண்டு இன்னொரு வகையாக சொல்லுறனாங்கள். 

இந்த காலகட்டத்தில நாளுக்கு நாள் ஒரு புது பெயரில காய்ச்சல் வருது. ஆஸ்பத்திரிக்கு போனால் உடன இரத்தம் குத்திப்பார்க்காமலே இன்ன காய்ச்சல் எண்டு சொல்லீனம். முந்திய காலங்களில் உணவைத் தான் மருந்தாய் நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். ஆனால் இப்போது விசத்தை தான் உணவு எண்டு சாப்பிடுறம். அப்ப மருந்து எண்டுறது என்ன?? உங்களுக்கு விளங்கும் நினைக்கிறன்.

இந்த காய்ச்சல் காரணங்களை அடுக்கி அடுக்கிக்கொண்டே போகலாம். சாப்பாடு ஒத்துவரவில்லை, குடிக்கிற தண்ணி ஒத்துவரவில்லை, இடங்கள் காலநிலைகள் ஒத்துவரவில்லை. ஆனாலும் எல்லாத்துக்கும் ஒரே தீர்வு பனடோல். இப்ப பனடோல் கூட நாலு அஞ்சு வகையில வந்துட்டு.

முந்தி காய்ச்சல் எண்டால் ஒரே ஆரவாரம், ஈரத் துணிபோட்டு உடம்பு எல்லாம் துடைப்பா அம்மா, தண்ணீரில நனைச்சு அதை புளிஞ்சு, அக்குளுக்குள் அந்த ஈரத்துணியை வைத்து துடைத்து. நெத்தியில துணியை கொஞ்சநேரம் அப்படியே விட்டுவிடுவா, அதன் பிறகு துணியை மீண்டும் ஈரமாக்கி திருப்ப திருப்ப துடைப்பா. அம்மாவின் கை தான் "தெர்மாமீட்டர்'. அடிக்கடி தொட்டுப்பார்ப்பா. சின்ன ஏற்ற இறக்கமும் அம்மாவுக்கு விளங்கிவிடும். அம்மா நம்பிக்கையிழந்துவிட்டால் ஆஸ்பத்திரி தான் கடைசி இடம். ஆனால் அதற்கு சந்தர்ப்பம் குறைவு. இப்போது கூட காய்ச்சல் என்று வீட்டில் உறங்கிவிட்டாலும், நள்ளிரவு தாண்டி இருந்தாலும் அடிக்கடி ஒரு கை தொட்டுப்பார்ப்பதையும், போர்வையை இழுத்து மூடிவிடுவதையும் நீங்களும் உணர்ந்திருக்கக்கூடும். இந்த உணர்வை மட்டும் எந்த விஞ்ஞானமும் மாற்றிவிடாது.

இன்னொரு பக்கத்தில் அப்பா, வாய்க்கு இதமான சாப்பாட்டோட வருவார். அந்த நாளுகளில சோடா குடிக்க ஆசைப்பட்டு காய்ச்சல் எண்டு சொல்லியும் இருக்கிறன். அப்பா "என்ன வாங்கிறது" என்று கேட்கும் போது இரண்டுதரம் இருமி ஒருக்கா மூச்சை இழுத்து விட்டு  செவினப்பும் பகோடாவும் என்று சொல்லி, மத்தியானம் என்னவேணும் எண்டு கேட்ட அம்மாவிடம் "புளிக்கஞ்சி இரால் போட்டு" எண்டு சொல்லி கட்டிலில காலாட்டினபடி காத்திருக்கிறது ஒரு சுகம்தான்.

புளிக்கஞ்சி அவிய அவிய வாற வாசம் இருக்கே. அம்மம்மா.... சிரட்டைய கைல வைச்சுக்கொண்டு அம்மாவையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். முடிந்து இறக்க முன்னமே வாங்கி குடித்திருப்போம்.

அதுபோக அடுத்தது பின்னேர ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும். பொதுவாக இடியப்பத்தை காய்ச்சல்காரர்ர சாப்பாடு எண்டு தான் இஞ்ச சொல்லுவார்கள். ஏனென்றால் பெரும்பாலும் காய்ச்சல் நேரம் இடியப்பம் தான் சாப்பிட கொடுப்பார்கள். இதற்க்கு காரணமும் உண்டு இடியப்பம் அவ்வளவு கடினமான சாப்பாடில்லை. கொஞ்சம் லைட்டான சாப்பாடு. அதால வேலைக்கு செமிச்சுப்போடும். அது போக எங்கட ஊரில இடியப்பமும் சொதியும் தேங்காய்ப்பூச் சம்பலும் சரியான பேமஸ்.

சொதிக்குப் பச்சை மிளகாயும் பாதியாக் கீறிப் போட வேணும். தாளிச்சு போட்டு வைச்சதான் உறைப்பா இருக்கும். இல்லாட்டிக்கு ஒருமாரி இருக்கும். மாங்காயும் போட்டால் நல்ல இருக்கும் எண்டு அனுபவிச்சு சாப்பிட்டு பாத்தவைக்கு தான் தெரியும், சம்பல் செத்தல்மிளகாய் பொரிச்சு, இடிச்ச சம்பல் தான் சுவை அதிகம்.

இடியப்பம் சாப்பிட்டு முடிய கோப்பைக்க நிக்கிற சொதியை உறிஞ்சிக்குடிக்கிற சுவை இருக்கே, நினைக்கவே வாயுறும், ஆனால் எனக்கு இடியப்பம் சாப்பிட்டு கைகழுவ திருப்ப பசிக்க தொடங்கிடும். இது ஒரு பெரிய பிரச்சனை. அதனால நான் இடியப்பத்த பெரிசா விரும்புறேல. ஆனாலும் இப்பவும் காச்சலுக்கு வீட்டில இடியப்பம் கிடைக்கிறது பெரிய சந்தோசம். சில நேரம் கடை அது தான் வதைக்கும். கடைல வாங்கிற இடியப்பத்தை தூக்க உருந்து கொட்டுப்படும் பாருங்கோ அப்ப இந்த காச்சல் பறவாயில்லை போல இருக்கும்.

இதைவிட காய்ச்சலுக்கு மிளகுதண்ணி, நெல்லுப்பொரி தண்ணி, மல்லித்தண்ணி எல்லாம் அந்த காலத்தில இருந்தது என்று அம்மம்மா சொன்ன ஞாபகம் இருக்கிறது. மல்லித்தன்ணனி வீட்டில செய்து குடிச்சிருக்கிறேன். மற்றவை பற்றி பெரிதாக தெரியாது.

பின்னர் இரவு படுக்கபோகும் போது வேது பிடிக்கிறது அடுத்த நிகழ்வாக இருந்தது. சில இடங்களில் ஆவிபிடிக்கிறது என்றும் சொல்லுவார்கள். தேயிலை, தேசி இலை, சஞ்சீவி இலை போட்டு அவிச்சு அதை தலையில துவாய போட்டு மூடி மூச்சை இழுத்துவிட ஆவிபட்டு முகமெல்லாம் வேர்த்து பாரம் எல்லாம் குறைஞ்சமாதிரி இருக்கும். அன்றைய இரவு நன்றாக தூக்கம் வரும். இது முக்கியமா சளிக்காய்ச்சல் வந்தால் தான்.

இப்பவும் சில இடங்களில வேது பிடிக்கிற நிகழ்வு இன்னமும் நடக்கிறது ஆனால் என்ன சுடுதண்ணீருக்க பாமசில வாங்கி வந்த மென்தோல போட்டு அதை தருகிறார்கள். எல்லாம் அந்த பனடோல் போல சின்ன சின்ன சந்தோசத்தை அழித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். 
இந்த கவனிப்பு ஒரு புறம் இருக்க.

இரவு ஆச்சு எண்டால் ஐயா நாவூறு துடைக்க வேப்பமிலை மிளகாயோட வந்து நிப்பார். மூன்று வேப்பிலை, மூன்று மிளகாய் எடுத்து கைல வைச்சு தலையைச்சுத்தி, ஆளை சுத்தி "மூன்று தரம் துப்பு" என்று ஐயா சொல்ல தூ தூ தூ என்று துப்பி அதை அடுப்பில் போடும் போது வெடிக்கும் அந்த மிளகாய், அந்த சத்தம் கேட்கும் போது நாவூறு எல்லாம் போட்டுது எண்டு திருநீறை பூசிவிடுவார். இன்று வரை நானும் கேட்டதில்லை அவரும் சொன்னதில்லை அதன் விளக்கத்தை.

நம்பிக்கை என்பது அவர் அவர் மனநிலையை பொறுத்தது ஆனால் அதை அவரவர் மனநிலையில் இருந்தே அணுகவேண்டும். இப்ப சிம்பிளா ஒரு சோடி பனடோல் எல்லாத்தையும் அழிச்சிடிச்சு. காய்ச்சல் எண்டால் கூட வீட்ட நிக்கவே மனம் வராது. இதுல "அம்மா காய்ச்சலா கிடக்கு" எண்டால் அம்மா "இரண்டு பனடோல குடிச்சுட்டு போ" எண்டு சொல்லி கடந்து சென்றுவிடுகிறா.. ஈரத்துணியும் இல்ல, புளிக்கஞ்சியும் இல்லை.

இதை வாசிக்கும் உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். இருந்தாலும் நான் சில குறிப்புகளை பதிவிடுகிறேன் நேரமிருந்தால் சமைத்துப்பாருங்கள்.

புளிக் கஞ்சி

ஒரு கைப் பிடி பழப் புளியை எடுத்து ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். பாதித் தேங்காயைத் துருவி ஒரு கப் தண்ணீரில் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உடைத்த உள்ளிப் பல், செத்தல் மிளகாய், மிளகு, மஞ்சள் ஒரு தேக்கரண்டி என்பவற்றை சிறிது தண்ணீர் விட்டு பசையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, முருங்கை இலை என்பவற்றை அளவாக எடுத்து கழுவி வைக்கவும். 

100 கிராம் வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். ஒரு சுண்டு புளுங்கல் அரிசி எடுத்து கழுவி வைக்க வேண்டும். உப்பு ஒரு தேக்கரண்டி எடுக்கவும்.

பாத்திரம் ஒன்றில் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை போட்டு அவிய விடவேண்டும். அரிசி அரைப் பதமாக அவிந்ததும் கறி வேப்பிலை, முருங்கை இலை, வெங்காயம் என்பவற்றைப் போட்டு அவிய விட வேண்டும். அரிசி நன்கு அவிந்தவுடன் தேங்காய்ப் பால், கரைத்த பழப்புளி, அரைத்த கூட்டு, அளவான உப்பு ஆகியவற்றைப் போட்டு அவிய விட்டு வாசம் வரத் தொடங்க இறக்கவும். இது சைவமாக செய்வது. மச்சம் சாப்பிடுபவராக இருந்தால் றால் போட்டும் சமைக்கலாம்.

காய்ச்சல் என்று சொல்லி வீட்டில் அம்மாவிடமோ அக்காவிடமோ  மனைவியிடமோ சமைத்துதர கேளுங்கள். காய்ச்சலைக் கொண்டாடி மகிழுங்கள். காய்ச்சல் சுகங்களை பனடோல் இல்லாது செய்துவிட்டது என்பதுதான் பனடோலை விட கசப்பான உண்மை.  
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா