2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா எங்கள் வீட்டில் ஒரு பிரப்பம் கூடை ஒன்று இருந்தது. அழுக்குத் துணிகளை எல்லாம் அதில் போட்டு வைப்போம். குறித்த நாளில் அவர் வந்ததும் கூடையில் இருக்கும் துணிகளை கீழே கொட்டிவிட அவர் எண்ண ஆரம்பிப்பார்.
வேஷ்டி ஒன்று, சாரம் இரண்டு, சேலை நான்கு. பள்ளிக்கூட காற்சட்டை இரண்டு. சட்டை இரண்டு, பெட்சீட் ஐந்து. ஆக மொத்தம் எத்தனை உள்ளது என்று எண்ணி உருப்படிக் கணக்கு சொல்லுவார். அம்மா அதை குறித்துக் கொள்ளுவார். சில இடங்களில் அவர்களும் கொப்பிகளிலும் எழுதி வைத்துக் கொள்ளுவார்கள்.


பெரும்பாலும் வெள்ளைத் துணி, பள்ளிக்கூட சேட்டுகளுக்கு நீலம் போடுவார், நீல பவுடர் பைக்கற்றுகளில் வரும். நீலம் போடாத வெள்ளை ஆடைகள் ஒரு பழுப்பு நிறமாக இருக்கும். அதனால் நீலம் போடுவது வளமையாகிப்போனது. வேறு சில ஆடைகளுக்கு கஞ்சிபோட்டு காச்சி அங்கே இருக்கும் வேலிகள், செடிகளின் மேல், அல்லது கொடிகளை கட்டி வெயிலில் காயப்பபோடுவார். கலர் கலராக துணிகள் காயும் போது குளத்துக்கு வெளியேயும் தாமரைகள் பூத்தது போல இருக்கும். அந்த இடம்.
பின்னர் ஈரம் காய்ந்தபின்னர் எல்லா துணிகளையும் அள்ளிக் கட்டி. மூட்டையாக தனது வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார், இதில் அவரின் வாடிக்கையாளர் எல்லோரின் உடுப்புக்களும் அடங்கும். அதன் பின் அயன் போட்டு அந்தந்த வீட்டுத் துணிகளை பிரித்து அவற்றில் தான் மையைக் கொண்டு ஏற்கனவே போட்ட குறிகளைப் பார்த்து தனித் தனியாக அடுக்கி, கட்டி வீடுகளுக்கு மீண்டும் கொண்டுவந்து தருவார். நாங்களும் பணம் கொடுத்து அவற்றை பெற்றுக்கொள்வோம்.
அந்த ஆடைகளை அடுத்த நாள் பாடசாலைக்கு உடுத்திச்செல்லும் போது, சேட் மடக்கு மடக்கு என்று நிற்கும், கிழிந்து டான் பண்ணி வைத்திருந்தாலும் நீலம்போட்ட வெள்ளைச்சேட்டும், சட்டையும் உண்மையில் அழகாகத் தான் இருக்கும். அந்த நீலப் பவுடர்வாசனை எனக்கு அந்த நாட்களில் போதை என்றும் சொல்லாம்.

எங்களின் காலத்தில் பணம் கொடுக்கும் கலாசாரம் இருந்தது, ஆனால் தாத்தா பாட்டி காலத்தில் அவர்களின் கூலி தானியங்களும் நெல், காய்கறிகளுமாக இருந்துள்ளது. எங்கள் ஊரில் உரிமைப்பங்கு என்று ஓரு விடையம் இருந்தது. அந்த ஊர் வீடுகளில் அவர்கள் தான் எல்லாவற்றுக்கும் முன்நிற்பார்கள். திருமணம் போன்ற நல்ல நாட்கள், மரண வீடுகளுகளில் அவர்களுக்கும் என்று உணவு, பொருட்கள் கொடுப்பார்களாம். முன்பு வேறுபட்ட முன்று சமூகத்தினருக்கு அந்த பங்கு கிடைக்கும். இப்போது அந்த வழக்கம் நலிவடைந்துவிட்டது. அவர்களும் வருவதில்லை.

அவர்களின் வேலைகள் அந்த விழாக்காலங்களில் முழுமையாக இருக்கும். கட்டாடிட்ட சொல்லிவிடுங்கோ, அல்லது கட்டாடி வரவேணும் என்று அவர்களுக்காகவே பார்த்திருப்பார்கள். இப்போது அவர்கள் வருவதில்லை, நாங்களே வேட்டியை எடுத்து மேலே கட்டி விடுவோம்.
இந்த தொழில் சாதி ரீதியாக வகைப்படுத்தப்பட்டதால். நாட்கள் செல்ல குறைய தொடங்கி விட்டது. அவர்களினை ஏனையவர்கள் வைத்திருக்கும் நிலை அவ்வாறானதாக இருக்கும். சில இடங்களில் கோவிலின் வெளிவீதி, சில இடங்களில் உள்வீதி, வீடுகளில் திண்ணை இவ்வாறு இருக்கும் போது அவர்கள் அந்த அடையாளத்தை விலக்கிவிடத்தான் நினைப்பார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுக்கு மேல்சாதியினரின் ஆடைகள் மட்டும் தான் தோய்ப்பார்களாம். இந்த சாதி அமைப்புமுறை அவர்களுக்குள்ளும் இன்னொரு பரிமாணத்தில் உள்ளது.

வயதான ஐயா ஒருவர் குளங்களில் தோய்க்கவருவார், அவருடன் கதைப்பதற்காக மணிக்கணக்காக காத்திருந்தேன், நேரம் பொழுதாகியும் அவர் வரவே இல்லை, அந்த குளத்தில் இனி தோய்க்க முடியாது போனதாக இருக்கலாம். அல்லது அவர் தொழில் செய்வதை நிறுத்தி இருக்கலாம்.
பின்னாட்களில் தணிகாசலம் வருவதில்லை, பின்னர் ஆங்காங்கே லோன்றிக்கடைகள் முளைத்து வந்துவிட்டன. அவர்கள் தங்களுக்கு என்று சங்கங்கள், சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள்.

நாட்களும் செல்ல செல்ல அந்த "கரி அயன்பொக்ஸ்" வீடுகளை அடைய தொடங்கியது. தேங்காய் சிரட்டை கரிகளை தயாரித்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாங்களும் சலவைக்காரராக மாறிக்கொண்டிருந்தோம்,
கரி அயன் பொக்சில் அயன் பண்ணும் போது கரி பிரள்வதாலும், இலகுவில் அயன் பண்ணக்கூடியவாறு மின் அழுத்திகள் அறிமுகப் படுத்தப்பட்டதாலும் இவற்றின் தேவைகள் குறைய ஆரம்பித்தது. இப்போது வீட்டிலேயே துவைத்த துணியை நாமே அயன் பண்ணிக்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிட்டோம், எப்போதாவது கயர் பிடித்த ஆடைகளை கொண்டு போய் கொடுக்கிறோம். இப்படியே தொடருமானால் இன்னும் ஆங்காங்கே இருக்கும் சலவைக்கடைகளையும் சிறிது காலத்தில் பூட்டி விடுவார்கள். ஆனாலும் அவர்களின் நேர்த்தி இன்னும் எம் கைகளுக்கு அமையவில்லை.
அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து கல்வி கற்று, சமூக அந்தஸ்து காரணமாக பெற்றோர்களை வீடுகளில் அமர்த்துகிறார்கள். அது ஒன்றும் பிழை என்று சொல்ல முடியாது. ஏன் எனில் எங்கள் சமூகத்தின் சாபங்களில் ஒன்று இந்த சாதியம். அதன் வீரியம் குறையும் நாட்களில் எல்லாம் அல்லது எல்லோரும் ஒன்றென்பது புலனாகும்.
தணிகாசலத்தின் பிள்ளைகள் படித்திருப்பார்கள், ஏதாவது பெரிய வேலைகளிலும் இருக்ககூடும். இந்த தலைமுறையின் பின் லோன்றிக்கடைகளும் இருக்காது. அவர்கள் தங்களுக்கான எதிர்கால திட்டங்களை வகுத்துவைத்துள்ளார்கள்.
-தமிழ்நிலா-
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா