Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

உப்பில்லாத கதை

Leave a Comment

வல்லைவெளியில் இருந்து தொண்டமானாறு வல்லை துன்னாலை வீதியியினூடாகவோ (உப்பு வல்லை வீதி), சாவகச்சேரி புலோலி வீதியின் யாக்கரை சந்தியினூடு திரும்பும் அதே வீதியினூடாகவோ அல்லது குஞ்சர்கடையில் இருந்து வரும் போது மண்டான் வீதியினூடாகவோ இங்கு வந்தடையலாம்.

மண்டான் உப்பு தரவை 
கரணவாய் இது ஒரு அழகிய கிராமம். இங்கு வாழும் மக்களும் அதிகம் விவசாயிகளாகத் தான் உள்ளார்கள். பெரும்பாலும் வெங்காயம், புகையிலை, திராட்சை போன்றவற்றுடன் நெற்செய்கை இவர்களின் பிரதான வருமானம் ஈட்டும் பயிர்கள் ஆகும். மேலும் இவர்கள் பெரும்பாலும் சைவர்களாகத்தான் இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்து ஒரு தேவாலாயம் கூட கரணவாயில் இல்லை என்று நினைக்கிறன். அம்மன், பிள்ளையார், முருகன், வைரவர், காளி, நாகதம்பிரான் போன்ற பல தெய்வங்களுக்குத் தனிக் கோவில்கள் இருக்கின்றன. காரணவாயின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதையும், ஒரு குலதெய்வமும் இருக்கின்றது.

அப்படி சிறப்பு மிக்க கரணவாய் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அங்கு மேற்கு பகுதியில் தோட்டங்களும், வயல்களும் பனங்கூடல்களும், அதிகமுள்ள கிராமங்களை கடந்து வரும் போது தொடர்ந்து வருவது தான் மண்டான், மண்டான் என்பது இரண்டு விடயங்களில் பிரசித்தம் பெறுகின்றது. ஒன்று மண்டான் சுருட்டு, (பின்னர் ஒரு நாள் பார்க்கலாம்) இன்னொன்று மண்டான் உப்புத்தரவையும் கோடையில் விளையும் உப்பும்.

மண்டானை அண்டிக் காணப்படும் தொண்டமானாறு கடல் நீரேரி, ஆனையிறவு வரை நீள்கிறது என்பது நம்மில் பலருக்கும் நம்பமுடியாதளவு உண்மையாக இருக்கும். ஆனால் அது உண்மை தான், அது அரியாலை நாவற்குழி ஊடாக இடையிட்டு தொண்டமானாறு கடல் நீரேரியில் இணைந்து கொள்கிறது.

யாழ்ப்பாணத்தில் விழுகிற மேலதிக மழை நீரினை சமுத்திரத்துக்கு சேர்க்கின்ற இயற்கை வடிகால்கள் என்றும் இவற்றை சொல்லலாம். இந்த மழை நீரினை தேக்கிவைக்கும் போது நீலத்ததடி நீரினை நன்னீராக மாற்றமுடியும் என்னும் நோக்குடன் நீர்ப்பாசன திணைக்களம் மூலம் தொண்டமானாறு நீரேரியின் மீது தற்போது அமுல்படுத்தியுள்ள நன்னீர் திட்டத்தின் அடிப்படையில் அண்மையில் தொண்டமனாற்றின் தடுப்பு கதவுகள் மீள திருத்தியமைக்கப்பட்டன. 

செல்வச்சந்நிதி கோவில் பின் வீதியிலும், ஏ9 வீதியில் நாவற்குழி பாலத்துக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கதவுகள் மூலம் நீர் இடையில் சேமிக்கப்பட்டு, பின் மேலதிக நீரினை சமுத்திரத்தினுள் அனுமதிக்கிறார்கள். 

அது போல கோடை காலத்தில் நிலத்துக்கு கடலினூடாக உவர் நீர் உள் வருவதை முற்றிலும் தடை செய்வதன் மூலம், உப்பு நீராக உள்ள நீரேரிகளை நன்னீராக்கி இதை அண்டிய கிராமங்கள் யாவையும் நன்னீர் கிணறுகளை ஆக்கும் திட்டமும் கூடவே நடைமுறையில் உள்ளது. இது தேவையான பயனுள்ள திட்டமாக இருந்தாலும். இதனால் காலம் காலமாக நடைபெற்று வந்த ஒரு தொழில் தடைப்பட்டுவிட்டது என்று சொல்லும் நிலைக்கு வந்திருக்கின்றோம். அது ஒரு வாரலாறு.

முன்னர் இலகுவான படகுப்பயணத்துக்காக ஆழமாக்கப்பட்ட அந்த வல்லை பகுதியின் சிறிய ஓடையின் ஊடாக கடல்நீர் இந்த பகுதியில் உட்புகுந்தது என்று சொல்லப்படுகின்றது. அந்த காலம் முதல் அங்கு உப்பு விளைகின்றது. நல்ல வெயில் கோடை காலத்தில் நீர் ஆவியாக அந்த உவர் தன்மை உப்பாக மாறுவதை உப்பு விளைவது என்று சொல்வார்கள். 

அந்நேரங்களில் நானும் அம்மம்மா வீட்டுக்கு செல்லும் போதிலும், இடம்பெயர்ந்து இருந்த காலத்திலும் உறவினர்களுடன் சென்று பார்த்திருக்கிறேன், உப்பு அள்ளியும் இருக்கின்றேன். அந்த நாட்களில் கரணவாயின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். பாற்கடல் போல் உப்பு தட்டுத் தட்டாக படிந்திருக்கும், பின்னர் அவற்றை அடித்து, கைகளினால் குவித்து யூரியா பைகளில் அள்ளிக் கட்டுவார்கள். உரப்பைகளில் நிறைத்த உப்பை தலைகளிலும் சைக்கிள்களிலும் சுமந்து சென்றார்கள். 

அது போல நாங்களும் எங்கள் கிராமத்தில் இருந்தும் அங்கு செல்வோம். கைகளில் வாளிகள், தட்டுக்கள் கொண்டு செல்வோம், போத்தலில் தண்ணீர் கொண்டு சென்று அந்த வெயிலில் வேலை செய்யவேண்டும், காலையில் உப்பு அள்ளுவது சற்று இலகுவானது, ஆனால் மதிய உணவுக்கு வீடு வந்து பின் மாலையில் மீண்டும் செல்லும் போது வெயில் மிதந்திருக்கும் அந்த நிலம். அதனையும் பொருட்படுத்தாது அள்ளிக்கொண்டிருப்பார்கள். அது போராட்டகாலம், அந்த நேரத்தில் வருமானம் என்பது தற்சார்பு தான், எங்களுக்கான வருமானம் வேண்டும், அதனால் உப்பு அள்ளுதல் தொடர்சியாக இருந்தது,

இந்தியன் ஆமி வந்து முகாமிட்டிருந்த நேரம் உப்புநீர் உள்வராமல் தடுத்திருந்தார்கள், அநேரத்தில் உப்பு விளைச்சல் இருக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதைவிட மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் புக்காரா விமானங்களின் தாக்குதல்களும் இருக்கும் அதனிலிருந்து தப்பவேண்டும். தரவைகளில் ஒளிவதற்கும் இடம் இருக்காது. அந்த நேரத்திலும் உப்பு அள்ளிக்கொண்டிருந்ததாக நிறைய கதைகள் வீட்டில் கேட்டிருக்கிறேன்.

அள்ளியவற்றில் விற்றது போக இரண்டு மூன்று உரப்பைகளில் எங்கள் வீட்டுக்கும் உப்பு வந்துசேரும். பின் நாட்களில் தேவைக்கு ஏற்றால் போல் அள்ளிக்கொண்டிருந்தோம். கொண்டுவரும் உப்பு மூட்டைகளை மாலின் பின்புறமாகவோ, ஒத்தாப்புகளிலோ, தாவாரங்களிலோ அல்லது வேலிக்கரைகளில் கற்களை அடுக்கி அதன் மேல் வைத்து பொலித்தீன் கொண்டு மூடியும் வைப்போம். இது சில வருடங்களுக்கு உப்பு வாங்க வேண்டிய தேவையை இல்லாமல் செய்தது.


மண்டான் உப்பு ஒரு காலத்தில் பெரும்வருமானத்தை கொடுத்ததால் அது யாழின் பிறபகுதிகளிலும் பேசுபொருளாக இருந்தது. அவை குவிக்கப்பட்டு அந்த இடத்திலே விற்கப்பட்டு பிற இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. விளைந்த உப்பை வெளியே எடுத்துச் செல்வதற்காய் அமைக்கப்பட்ட வீதி உப்பு வீதி என்று அழைக்கப்பட்டது, அது இன்னமும் அழைக்கப்படுகின்றது. அதிகமானவர்களுக்கு "உப்பு ரோட்" என்றால் தான் அங்கு தெரிந்திருக்கும்.

ஆனால் அந்த கோடையில் உப்பு வருவதற்கு முன்னர் அங்கிருந்து வரும் உப்பு புழுதி வீீீடுகளுக்குள் அள்ளிக்கொட்டும். மண்டான் வயல்களில் நெல்லில் படிந்து விளைச்சலை குறைக்கும். ஆனாலும் உப்பு அந்நேரங்களில் பெரிய வருமானங்களையும் தந்தது. இப்போது உப்பு விளைவதில்லை, மண்டான் தனது பெயருக்குரிய பிரசித்தங்களை குறைத்துக்கொள்கிறது. 

மண்டான், இந்த பெயரினை சொல்லும் போது வடமராட்சியை சேர்ந்தவர்களிடத்தில் ஒரு விதமான பார்வை எம் மீது இருக்கும், காரணம் பொதுவாக வடமராட்சி இறுக்கமான சாதீய கட்டமைப்புக்குள் நீண்டகாலமாக இருக்கும் இடம். அந்தவகையில் மண்டான் என்பதும் ஒரு சமூகத்தவரை பிரதிநிதித்துவம் செய்யும் இடமாக இன்றும் அதே கட்டமைப்புடன் தான் இருக்கின்றது. ஆனாலும் மண்டான் நிறையவே வளர்ந்துவிட்டது.

படங்கள் - தனங்களப்பு உப்பு வெளி
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா