Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சைக்கிள் எங்கள் காவு வண்டி | தமிழ்நிலா

Leave a Comment

சைக்கிள் ஒரு காலத்தில் எல்லோருக்கும் இரண்டுசக்கர தேர்தான். முதல் முதலாகச் சைக்கிள் ஒடிய அனுபவம், அந்த சைக்கிளை வாங்குவதற்காகச் செய்த தில்லாலங்கடி வேலைகள், கைகளில் சைக்கிள் கிடைக்கும் அந்தநாள் மனதில் எழுந்த பூரிப்புக்கள் என்பனவும் ஒவ்வொருவருக்கும் மறக்காத நிகழ்வுகளாகவே இன்றும் ஒட்டியிருக்கும் இருக்கும்.

அந்த காலங்களில் கால்நடைதான் அனேகரின் பயணஊடகம். போற-வாற வழிகளில் தெரிந்தவர்களுடன் கதைத்துக்கொண்டே நடப்பது என்பதில்தான் அலாதி பிரியம் அக்காலத்தில் வாழ்ந்தோருக்கு. பிறகு போக்குவரத்து வளர்ச்சியின் அம்சமாக ஊருகளுக்குள் சைக்கிள்கள் அறிமுகமாகியது.

அப்பாவின் சைக்கிளில் பயணம் செய்யும் எனக்குச் சைக்கிள் ஓடும் யாரைப் பார்த்தாலும் அப்போது பொறாமை. எப்பிடிதான் ஓடுகிறார்களோ, என்ற ஆச்சரியம் தான் வேறெதுவும் இல்லை. அப்போது புவியீர்ப்போ அல்லது இதர பௌதீக காரணிகளோ தெரியாது. ஆனால் இரண்டு சில்லு சைக்கிள் ஓடுவது என்பது ஆச்சரியமாகவே இருந்தது.

ஒருகாலத்தில் சைக்கிளுக்கு பின்னால் ஓடினோம். பின்னர் அப்பாவின் சைக்கிளை உருட்டிக்கொண்டு திரிந்தாலே சைக்கிள் ஓடுவது போல நினைப்புக்கள் இருக்கும். சைக்கிளில் காலை பெடலில் வைக்காமல் நிலத்திலேயே ஊன்றிக் கொண்டு நின்று, பின்னர் சீட்டில் ஏறி இருந்து பெடலை மறுபக்கமாகச் சுற்றிப்பழகி, அடுத்தது பாருக்கால காலை விட்டுக் கெந்திக் கெந்தி ஓடப்பழகி, பின் தனியாகச் சிறிது ஓடப்பழகித் தான் வந்திருப்போம். ஓடப்பழகும் நாட்களில் பின்னைால் யாராவது பிடித்துக்கொண்டு வருவார்கள் அவர்கள் கைய விடும் அந்த நொடி தான் இங்கு மிக முக்கியமானது. மரத்தில் கையைப் பிடித்துக்கொண்டு சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது என்னைத் தள்ளி விட்டார்கள். அப்படியே ஓடப்பழகியது தான் கதை.

வீட்டிலும் சரி, வெளியில் சிறு கற்களும் ஊரியும் மணலுமான வீதிகளிலும் சரி விழுந்து எழும்பியிருப்போம். ஆரம்ப வயதுகளில் அனேகரின் காலிலோ உடம்பிலோ இருக்கும் காயம் இந்த சைக்கிள் ஒடிப்பழகியதில் தான் வந்திருக்கும். அதிலும் திரும்பிப்பார்த்துக் குப்புற விழுந்ததும், பிரேக் பிடிக்காமல் விழுந்து எழும்புறதுமாத்தான் இருக்கும் பெரும்பாலானவை. ஓரளவுக்கு ஓடப்பழகிய பின்னர் சைக்கிள் ஓடுவது எனக்கு கம்பீரமான எண்ணத்தைத் தந்தது. இது வரை ஓடப்பழகி, உடைத்து நெளித்த சைக்கிள் அப்பாவினுடையதோ அல்லது அண்ணா அக்காவினுடையதோ தான். அந்த சைக்கிளை ஓட எடுப்பதற்குள் நடந்து முடித்திருக்கும் சண்டை காயமும் இரத்தமுமாக இருக்கும்.

இந்த அலப்பறைகளைத் தாங்க முடியாது வீட்டில் புதிய சைக்கிள் வாங்க முடிவாகியிருக்கும் பலருக்கு. சைக்கிள் என்றால் முழு சைக்கிள் இல்லை. அந்தக் காலத்தில் முழு சைக்கிள் என்பது என்னைப் போன்ற குட்டிப்பிள்ளைகளுக்கு எட்டாக்கனி. அரையோ முக்காலோ தயாராக இருக்கும்.

சைக்கிள் வாங்கிய புதிதில் நாளுக்கு இருதரம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, பிறகு ஒவ்வொரு ஞாயிறும் எனப் பழந்துணியெடுத்துத் தூசு துடைத்து எண்ணெய் போடுவேன். அதன் பிறகு அது மழையில் கழுவப்பட்டால் தான். அப்படித்தான் புதிதில் டைனமோ, சீட் கவர், றிம் பூக்கள், லைட்கள், ரியூன் ஹோன்கள் என்று அமர்க்களமாக இருக்கும். ஆரம்பத்தில் சொன்னது போல இரண்டு சக்கர தேர்போல. இறக்கங்களில் கைகளைவிட்டு ஓடுவதும், எதிர்க்காற்று நேரங்களில் மாங்கு மாங்கு என்று நுரைதள்ள விலித்து வலித்து ஓடுவதும் இரு வேறு துருவங்கள். இவற்றுக்குள் முன்னால் போபவரை முந்தி ஓடவேண்டிய கட்டாயங்களும் ஏற்படத் தவறுவதில்லை.

பாடசாலைகள், தனியார்கல்வி நிலையங்கள் எல்லாம் சைக்கிளில் தான், பல பள்ளிக்காதல்களின் ஒரே ஒரு சாட்சி. ஒருவர் மேல் இருக்கும் கோபத்தை அந்த சைக்கிள் மேலையே கொட்டிவிடுவார்கள். அப்படி ஒவ்வொன்றிலும் ஊறி இருந்தது. இன்று வரை அந்த சைக்கிளைப் பக்குவப்படுத்தி வைத்திருப்போரும் உண்டு. இப்போது லுமாலா, சைனா சைக்கிள் இருந்தாலும் முன்னர் ஏசியா, ரல்லி சைக்கிள்கள் தான் பிரபலமானது. இப்போது வரும் சைக்கிள்களை விட அந்த சைக்கிள்கள் தான் நல்லது, உறுதியாக இருக்கும். தற்போதய சைக்கிள் அப்படியில்லை 6 மாதம் ஓடினால் பழுதாகிவிடும். முன்பு ஒருமுறை கழுவிப் பூட்டினால் 3, 4 வருசம் ஓடலாம். இப்போது 3,4 மாதம் பாவிக்கிறதே கஸ்ரமான காரியம்.

சைக்கிளுக்குக் காற்றுப்போனால் கடையில் காத்து நின்றுதான் வேலை முடித்து வாங்குவோம். பெடல் அல்லது வேறு ஏதாவது கழற்ற அடிக்கும் போது உள்ளுக்குள் வலிக்கும். அந்த வலி. அனுபவித்த சைக்கிள் காதலர்களுக்குத்தான் விளங்கும். அப்போது எங்களுக்கு கடைக்காரர் எல்லோரும் நண்பர்கள்.

அண்ணை உங்கட பெயர் என்ன? எப்பிடி உங்கட பயணம் ஆரம்பித்தது?

“என்ர போர் ரவி, சாவகச்சேரிலதான் வேலைய தொடங்கினான், அவற்ற பெயரும் ரவி தான். அவர் கச்சாய் ரோட்ல இருக்கிறவர். அவருட்டை தான் வேலை பழகினது. பழகேக்க 15, 16 வயது வரும். பள்ளிக்கூடம் இடையில விட்டுட்டு இந்த வேலைக்கு வந்தன்”

உங்கட வேலை என்னமாரி போகுது..?


"பிறகு சந்தைக்குள்ள மரக்கறி வியாபாரம். பிறகு ஒரு பெட்டிக்கடை மாரி போட்டுச் செய்தனான். அதுவும் சந்தைக்குள்ளைதான். அது முடிய பேக்கரிலை வேலை செய்தனான். அதுக்கு பிறகு திருப்ப இந்த வேலைக்கு வந்துட்டன். 20 வருசத்துக்கு கிட்ட செய்றன்.”

போர்க்காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்குப் பல வேலைகள் தெரிந்திருக்கும். ஒவ்வொரு இடப்பெயர்வுகளுக்கையும் வேற வேற இடங்களில் வசிக்க வேண்டி ஏற்படும். வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த எந்த வேலைக்காவது சென்றுதானாகவேண்டும். பொருளாதார நெருக்கடிகள் இருந்த காலமாகியபடியால் சிறிய வேலைகளை என்றாலும் செய்ய வேண்டும். 20 லீற்றர் கான் தேங்காய் எண்ணெய்யை வாங்கி அதை அரை லீற்றராக உடைத்து விற்ற எத்தனையோ குடும்பங்கள் இருந்தன. புலம் பெயர் நாடுகளைப்போல இரண்டு மூன்று வேலைகளை செய்தோரும் உண்டு. சைக்கிள் பற்றிய உரையாடலைத்தொடர்ந்தோம்.

ஆரம்பத்தில் இருந்து எப்பிடி சைக்கிள் வேலை வருகிறது. கூடி இருக்கா குறைந்து இருக்கா..? அன்றாடம் வீதிகளைப்பார்க்கும்.ஒவ்வொருவருக்கும் வாற கேள்வி தான் இது.

“இப்ப வரவர குறைஞ்சுட்டு மோட்டார் சைக்கிள்கள் வந்தாப் போல சைக்கிள் வேலை குறைவு. 1995, 1996. அப்பதான் சைக்கிள் பாவனைகள் கூடினது. போக்குவரத்துக்கும் சைக்கிள்தான். ஒரு வீட்டில இரண்டு மூன்று சைக்கிள்நிக்கும் அப்ப ஒரு சைக்கிள் ஒட்ட. 5ரூபா, இப்ப 50 ரூபா வாங்கிறம், 5ரூபா இருக்கும் போது வருமானம் குறைவு எண்டாலும் பெறுமதி கூட காசுக்கு. இப்ப காசு வருமானம் கூட.பெறுமதி குறைவு. ஒரு சைக்கிள் வேலை முடிச்சாலும் சாமான் வாங்க காணாது. முந்தி 50 ரூபா வேலை செய்தாலும் ஒரு குடும்பம் சீவிக்கலாம். இப்ப 500 ரூபா எண்டாலும் கஸ்ரம். சாமானுகள் விலை கூடினதால வாற வருமானங்கள் காணாது.”


“ஒரு சைக்கிள் கழுவிப் பூட்ட 1500 ரூபா வரும். ஒவ்வொரு நாளும் ஒரு சைக்கிள் வரும் என்று சொல்லேலாது, சில நேரம் ஒட்டு மட்டும் தான் வருமானம். அதை வைச்சுத்தான் எங்கட சீவியம்.”

இந்த சைக்கிள் எங்கள் வாழ்க்கையில் இன்னும் நெருக்கமாகக் கலந்திருந்த காலமது, திடீரென ஈழத்தில் நடக்கும் இடப்பெயர்வுகள். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 2000 ஆம் ஆண்டு தென்மராட்சியை விட்டு வடமராட்சிக்கு அகதிகளாகப் போனதும் இதே சைக்கிளோடு தான். சைக்கிளில் எவ்வளவு பொருட்களை வைத்துக்கட்ட முடியுமோ அவ்வளவு பொருட்களையும், காற்றடிக்கும் பம்மையும் கட்டி நாம் கொண்டு அலைந்தோம். அதே சைக்கிள் தான் ஆக்களை இடம்மாற்றியது, இடம் பெயர்ந்திருந்த உறவினர்களைத் தேடிச்சுற்றியது.

வன்னியை சேர்ந்தோருக்கு தெரியும் சைக்கிள் காவுவண்டியும் கூட, காயமடைந்தோரை வைத்தியசாலைக்கு சுமந்து செல்லும். எந்த வசதியும் இல்லாத அவர்களுக்கு சைக்கிள் தான் விதி. காயமடைந்தவரை முன்னால் இருத்தி சிறிய பாதைகளினுடாக கொண்டுவந்துவிடுவார்கள். அப்படியாக எங்களோடும் போர்வாழ்வியலோடும் கலந்திருந்தது.

அது பற்றரி இல்லாத காலம், அப்போதும் அதே சைக்கிள் தான் கைகொடுத்தது டைனமோவை வைத்துச்சுற்றி வரும் மின்சாரத்தில் தான் புலிகளின்குரலோ, ஜ.பி.சியோ, பி.பி.சியோ கேட்டு என்ன நடக்கிறது என்று அறிந்து வைத்திருந்தோம். மண்ணெண்ணை இல்லாத இரவுகளில் சைக்கிள் வெளிச்சங்கள்தான் டைனிங் லாம்ப்.


எங்களுக்கும் எங்கள் வாழ்க்கையிலும் சைக்கிளும் அதன் நினைவுகளும் பிரிக்கப்படாமல் இருக்கின்றது. இப்போது மோட்டார் சைக்கிள், கார் எது வந்தாலும், சைக்கிள்கள் பழைய இரும்புக்கு விற்கப்பட்டாலும் இந்த சைக்கிள் நினைவுகள் துருப்பிடிக்காமலும் என்றுமே அழித்துவிட முடியாததுமாக எப்போதும் இருக்கும்.
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா