Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சமூக வலைத்தளங்களும் இளைஞர்களும்

Leave a Comment

முப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மே 18 இல் போர் முடிந்ததாக அறிவித்தது அரசாங்கம். ஆனால் இன்னும் முடிந்தபாடில்லை அந்த யுத்தம். தமிழ் மக்களின் வாழ்வையும், வளத்தையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருந்தது அந்தப்போர்.
போருக்கு பிந்தைய பத்தாண்டுகள் என்பது எவ்வாறான ஒரு பாரிய மாற்றத்தினை எங்களுக்குள் ஏற்படுத்திக்கடந்துள்ளது என்பது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். அவை நேரானவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். குறித்த இக் காலப் பகுதியில்தான் நிறைந்த மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இன்றைய நவீன உலகில் மனிதன் பல பல புதிய கண்டுபிடிப்புக்களை நோக்கி மிக வேகமாக விரைந்து கொண்டிருக்கின்றான். அவனது கணடுபிடிப்புக்கள் அறிவியல், தொழிநுட்பம் என பரந்து செல்கின்றது. மனித கண்டுபிடிப்புக்களைத் தளமாகப் பற்றிக் கொண்டு மனித சமூகம் நகர்ந்து செல்ல வேண்டுமென்ற கட்டாயத்திற்கு இன்றைய சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய கண்டுபிடிப்புக்களில் பிரதானமானதாகவும் பலராலும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றன சிமாட் தொலைபேசிகள், ஆறுமாதங்களுக்கு ஒருதடவையோ, வருடத்தில் ஒருமுறையோ புதிதாக அறிமுகமாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

மனிதன் இன்னொரு மனிதனுடன் இலகுவாகவும் இலவசமாகவும் தொடர்புகளைப் பேணிக்கொள்வதற்கும், உலகின் எந்த மூலையில் இடம்பெறும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கும், அதன்பால் தன் உணர்வுகள், கருத்துக்களை வெளிப்படுத்தவும் பயன்படக்கூடிய ஒன்றாகவே தொலைபேசிகள் இருக்கின்றன. குறிப்பிட்டுச்சொல்வதாயின் போரின் இறுதிப்பகுதியான 2005-2009 காலப்பகுதியில் அரசாங்கம் வடக்கு கிழக்கில் தொலைபேசி சேவைகளினை நிறுத்தியும், கட்டுப்படுத்தியும் இருந்தது. ஊருக்கு அல்லது தெருவுக்கு ஒரு தொலைத்தொடர்பு நிலையங்கள் இருந்தன. அவற்றின் ஊடாக இணையப்பாவனை நடைமுறையில் இருந்தது. தேசிய அடையாள அட்டைகளைக் கொடுத்து மணித்தியாலத்திற்கு 200 ரூபாக்களுக்கு இணையத்தினை பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். 2009களின் ஆரம்பத்தில் தான் தொலைபேசிகள் பரவலடையத்தொடங்கியது GPRS என்னும் இணையை இணைப்பின்வழி ஆங்காங்கே இருக்கும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் பாவiயில் இருந்தது.

2009 ஜூன் இல் இலங்கை முழுவதிலும் 12,658,483 நிலையான, கைத்தொலைபேசி இணைப்புக்கள்; இருந்துள்ள அதேவேளை அண்ணளவாக 240,000 பேர் அவர்களில் இணையம் மற்றும் மின்னஞ்சல் பாவனையாளர்களாக இருந்துள்ளனர்கள் . அவர்களில் பெரும்பான்மையானோர் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனையமாவட்டங்களை வதிவிடங்களை கொண்டவர்கள். அரசு வடக்குக்கிழக்கை தமது இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக இணைப்புக்களை கட்டுப்படுத்தியிருந்தது. மேலும் அந்நேரங்களில் சாதாரண தொலைபேசிகளே பாவனையில் இருந்துள்ளது. 

ஆனால் இன்று குறைந்த விலைகளில் சிறந்த தொலைபேசிகள் கிடைப்பதாலும், முற்றிலும் இணைப்புக்கட்டணம் இன்றி இணைப்புக்கள் வழங்கப்படுவதாலும், அவற்றுக்கான கட்டண அறவீடுகளும் மிகவும் குறைவானதாக இருப்பதாலும், அதன்பாவனை மேலும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 2018 மார்கழியில் 21,670 மில்லியன் சனத்தொகை உள்ள இந்நாட்டில் 32,528,104 கைத்தொலைபேசி இணைப்புக்கள்; இருக்கின்றன . அதாவது 32.5 மில்லியன், இவர்களில்; 7,263,161 பேர் இணையப் பாவனையாளர்களாக உள்ள அதேவேளை 6.2 மில்லியன் பாவனையாளர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகின்றார்கள், இவர்களில் 5.7 மில்லியன் பேர் கையடக்கத்தொலைபேசியில் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் என்னும் சொற்பிரயோகம், வெள்வேறு வகையான இயங்குதளங்கள் மூலம் வௌ;வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட செயலிகள் (App). இவற்றின் மூலம் தமது எண்ணங்களையும் செயல்களையும் இன்னொருவருடனோ அல்லது குழுவினருடனோ பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய இணைய வெளியில் பல்வேறுபட்ட செயலிகள் (App) காணப்படுகின்றன. இவற்றில் பேஸ்புக் (Facebook), டுவிட்டர் (twitter), இன்ஸ்டாகிராம் (instagram), வாட்ஸ்அப் (WhatsApp), வைபர் (Viber), யுடியுப் (Youtube), போன்றன அதிக அளவில் பாவனையில் காணப்படும் சமூக வலைத்தளங்களாகும். இவற்றில் பேஸ்புக் உள்ளிட்ட பத்து சமூக வலைத்தளங்கள் உலகில் அதிகம் பயன்பாட்டில் காணப்படும் அதே வேளை உலகளாவிய ரீதியில் 2.32 பில்லியனுக்கு மேல் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதுடன் இதனை சிறுவர்களும் இளைஞர்களுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். 18-24 வயதிற்கு உட்பட்டவர்களில் ஆண்கள் 16%, பெண்கள் 11% வீதத்தினரும். 25-34 வயதிற்கு உட்பட்டவர்களில் ஆண்கள் 19%, பெண்கள் 13% பயன்படுத்துகின்றனர். அதாவது மொத்தப் பாவனையாளர்களில் 59% வீதமானவர்கள் இளைஞர்களே. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பேஸ்புக், இன்ஸ்ராகிராம், வாட்ஸ்அப் போன்றன பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சராசரியாக 20.11 MBPS வேகத்தில் கையடக்க தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் விளக்கமாக சொல்வதாயின் 3G, 4G இனைக்கடந்து இப்போது 5G பரீட்சார்த்த முயற்சியில் உள்ளது. இதனால் நாளுக்கு நாள் பாவனையாளர்கள் அதிகரித்தவண்ணம் தான் உள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய மனிதன் தள்ளப்பட்டுள்ளான். ஏனெனில் இவை இல்லாதவர்களை ஏனையவர்கள் ஏளனமாகப் பாhக்கும் நிலை காணப்படுகின்றது. நிமிர்ந்து நடந்த உலகம் குனிந்து நடக்க ஆரம்பித்திருக்கின்றது, கைகளில் ஏந்தியபடி வேகமாக நடக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 

இவ்வாறு சமூக வலைத்தளங்கள் மனித பாவனையில் இருக்கையில் இவற்றினால் பல நன்மைகள் ஏற்படுகின்ற அதே வேளை தீமைகளும் ஏற்படுகிறன. அதனடிப்படையில் சமூக வலைத்தளங்களினால்; ஏற்படும் நன்மை தீமைகள் தொடர்பில் நோக்குவோம்.

சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்

உலகில் எப்பாகத்தில் வசிக்கும் மனிதனும் தன் உறவினர்கள் நண்பர்களுடன் தன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் உறவினைப் பலப்படுத்திக் கொள்ளவும் இவை பெரிதும் உதவுகின்றன. 1977 களில் இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சென்ற உறவுகள் தங்கள் உறவுகளுடன் தொடர்பில் இருக்க இவற்றைப்பயன்படுத்துகிறார்கள். பிரிந்து போன உறவுகள் பல பேஸ்புக் போன்ற வலைத் தளங்கள் மூலம் இணைந்து கொண்ட நிகழ்வுகள் நாம் அறிந்ததே. மிகவும் குறைந்த கட்டணத்தில் முகம் பார்த்து வௌ;வேறு நாடுகளில் இருந்து உரையாடக்கூடியவகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு தனி நபர் கருத்தை அல்லது குழுவிகன் கருத்தை ஏனையவர்களிடம் கொண்டு செல்வதற்கு பெரிதும் துணை நிற்பவையாக சமூக வலைத்தளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசியல் ரீதியான கருத்துக்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் போன்றவற்றை ஏனையோரிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கை சமூக வலைத்தளங்கள் பெறுகின்றன. 

உங்களுக்குத்தெரியும் நீங்கள் எல்லோரும் எத்தனை குழுக்களில் உள்ளீர்கள் என்பது. நீங்கள் தான் அக்குழுவின் நிர்வாகியாகக்கூட இருக்கலாம். இவற்றினால் ஒருகாரியத்தை விரைவாக செய்துமுடிக்கக்கூடியவாறு இருக்கின்றுது. உதாரணமாக ஒரு குடும்பம் வறுமையில் இருக்கின்றது என்ற தகவல் குழுவினில் பகிரப்பட்ட சில நேரங்களில் அவர்களிற்கான உதவிகிடைக்கப்பெறுகின்றது. 

தம் திறமைகளை கண்டுகொள்ளாத சமூகத்தில் தமக்கென ஒரு அங்கிகாரத்தை நிலைநாட்ட முடியாதவர்களுக்கு பெரிதும் கை கொடுப்பவையாக இச் சமூக வலைத்தளங்களே காணப்படுகின்றன. தமக்கென வலைத்தளங்களை உருவாக்ககி அதில் தம் ஆக்கங்களைப் பதிவேற்றவும், யுடியுப்பில் சனல்களில் தமது வீடியோ பதிவுகளை இட்டு அதன் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தவும், தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலமும் தமக்கான அங்கிகாரத்தைப் பெற இவ் வலைத்தளங்கள் உதவுகின்றன.

உலகில் அவ் அப்போது இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள பெரிதும் வாய்ப்பைக் பொடுப்பவை சமூக வலைத் தளங்களே. விபத்துக்கள், வேலைவாய்ப்புக்கள், அரசியல் மாற்றங்கள், இயற்கை அல்லது செயற்கை அனர்த்தங்கள் போன்ற விடயங்கள் மக்களை விரைவில் சென்றடைவதற்கு இவை துணை செய்கின்றன. உதாரணமாக அண்மைய உலக மற்றும் இலங்கையின் தேர்தல்களில் இவை பெரிதும் பயன்பட்டன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ளுராட்சிசபை தேர்தலின் போது சமூகவலைத்தளங்களில் பிரபலமான இளைஞர்களே கட்சிகளால் வேட்பாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றியீட்டினார்கள். அவர்களின் பிரச்சாரங்கள் சமூகவலைத்தளங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. மொத்த அளவில் 30% இளைஞர்களைக் கொண்டிருக்கலாம், 25% பெண்கள் பிரதிநிதித்துவம் என்பவற்றின் மூலம் மேலும் இவை சாத்தியப்பட்டது. அதனைவிட இப்போது வாக்காளர்களும் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் காண ஏதுவாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டன. 

சென்ற மார்கழி 20 2018இல் பருவப்பெயர்ச்சிக்காற்றின் காரணமாக வடக்கில் ஏற்பட்ட திடீர்மழையினால் குறிப்பாக 24 மணிநேரத்தில் 300மிமி மழைவீழ்ச்சினால்;; எற்பட்ட வெள்ள அனர்த்தங்களைத் தொடர்ந்து, தன்னிச்சையாக சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்த இளைஞர்கள், மீட்புப் பணிமுதல் நிவாரணங்கள், மீளவீடுதிரும்ப உதவுதல், பின்னர் வாழ்வாதாரம், மாணவர்கள் கல்வி வரை அத்தனை வேலைகளையும் பிரித்து, சரியாக செய்து முடித்திருந்தார்கள். அவர்கள் சமூகவலைத்தளங்களைத்தான் தங்கள் ஊடமாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

இரணைமடுக் குளத்தின்நீர்மட்டம் உயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் வெள்ளக்காடாக மாறியிருந்தது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் தை மூன்றாம திகதி 2019 இன் விபரப்படி 39,895 குடும்பங்களைச்சேர்ந்த 123,862 பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் 474 குடும்பங்களின் வீடுகள் முற்றாகவும் 4522 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்திருந்ததுடன் இரண்டு மரணங்களும் சம்பவித்திருந்தது. எந்த அரச நிறுவகங்களும் உடனடியாக களத்தில் இறங்காத நிலையில் அன்றுமாலை சமைத்த உணவுகளுடனும், அத்தியாவசிய பொருட்களுடனும் இளைஞர்கள் குழுக்களாக களமிறங்கியிருந்தார்கள். 

பெரிய அளவிலான ஊடகங்கள் தெற்குப்படுதிகளில் ஏற்பட்ட 2016 பருவப்பெயர்ச்சி, 2017 இல் ஏற்பட்ட நிலச்சரிவினை அணுகியதைப்போல் அணுகியிருக்கவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அவை மிகவேகமாகப்பரவியிருந்தன. 93 க்கு மேற்பட்ட இளைஞர் குழுக்கள் களத்தில் இறங்கியிருந்தார்கள். பேஸ்புக் குழுக்கள், வட்ஸ்அப் வைபர் குழுக்கள் மூலம் இணைந்த அவர்கள், நீரோடும் வாய்க்கால்களை சரிசெய்தல். வெள்ளத்தில் அகப்பட்ட மனிதர்களையும், விலங்குகளையும் மீட்கும் பணிகள், அவலங்களை வெளிக்கொணர்தல். சேகரிக்கப்படும் பொருட்களை தரம்பிரித்து பொதிசெய்து இடைத்தங்கல் முகாம்களில், வீடுகளில் உள்ளோருக்கு பகிர்ந்தளித்தல், மீள வீடுதிரும்புகையில் வீடுகள், கிணறுகளை துப்பரவு செய்தும் கொடுத்தார்கள். பின்னர் அவர்களது வாழ்வாதாரம், பிள்ளைகளின் கல்விகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல் என அனைத்தையும் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் செய்துகாட்டியிருந்தார்கள்.

தற்போது உலகில் ஏற்பட்டிருக்கும் சூழல் சமநிலைக்குழப்பங்களை சரிசெய்வதற்கான வேலைத்திட்டங்களை சமூக வலைத்தளங்களின் உதவியுடன் ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். கிராமம், நகரங்கள் தோறும் இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் கழகங்கள் மூலம், மரநடுகைகள், பொலித்தீன்  பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வுகள் போன்றவற்றை சிறப்பாக முன்னெடுக்கிறார்கள்.

குறிப்பிட்டுச்சொல்வதானால் சிறகுகள் அமையம், பிளாஸ்டிக் சீரோ போரம் (Plastic Zero Forum), உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம், பசுமைச்சுவடுகள், பசுமைநிழல்கள் போன்றவற்றுடன் இன்னும் பல இவைதொடர்பாக இயங்குகின்றன.

சமூக வலைத்தளங்கள் பல கதைசொல்லிகளை உருவாக்கியிருக்கின்றது, அவ் இளைஞர்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களாகவே சொல்லும் சுயாதீன ஊடகவியளாளராகவோ, பிரஜைகள் ஊடகவியளாளராகவோ உருவாகின்றார்கள். அவர்களால் கீழ்மட்டத்தில் இருந்து செய்திகள், கதைகள் வெளியேவருகின்றன. அவை சமூகத்தில் பாரியமாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. டிஜிட்டல் ஸ்டோரி டெல்லிங் (Digital Storytelling) என்னும் புதிய முறை இளைஞர்களால் உருவாக்கப்பட்டு சரியானமுறையில் பயணிக்கிறது.

ஊறுகாய், பூவன் மீடியா, துமி போன்றன டிஜிட்டல் ஊடகங்கள் தங்கள் தளங்களில் ஆவணப்படுத்தல் காணொளிகளை உருவாக்கி வெளியிடுகிறார்கள், அவை எதிர்கால சந்ததிகளுக்கு சென்றடையக்கூடிய வகையில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரும் இந்த பொதுவெளியில் பயணிக்கிறார்கள். அவர்களிடம் உடனடியாக விடயங்கள் தெரிவிக்கப்படுவதுடன், அவர்களும் அவற்றுக்கான பதில்களை அதே நேரத்தில் வழங்கிவிடுகிறார்கள். 

வணிக ரீதியில் வெற்றியடைவதற்கும் வலைத் தளங்கள் பெரிதும் காரணமாகின்றன. குறிப்பாக புதிய பொருட்களின் வருகையை மக்களுக்கு தெரிவிப்பதற்கும் பொருட்களின் தன்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும், மக்களின் விருப்புக்களை அறியவும் வலைத் தளங்கள் குறிப்பிட பங்காங்றுகின்றன. இவற்றின் மூலம் இணையவழி வர்த்தகத்தை மேற்கொள்ளும் இளைஞர்களும் உருவாகியுள்ளனர்.

இவ்வாறான நன்மைகள் ஏற்பட்டாலும் எண்ணற்ற தீமைகளும் சமூக வலைத்தளங்களால் எற்படவே செய்கின்றது. 

நேரம் வீண் விரயமாக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு தீமையாகும். நாளொன்றின் பல மணி நேரத்தை பலர் சமூக வலைத்தளங்களில் கழிக்கின்றனர். பயணம் செய்யும் போதும், வேலை பார்க்கும் இடங்களிலும் தமக்கு கிடைக்கும் சிறிய ஓய்வின் போதும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி விடுகின்றனர். தம்மைச் சுற்றி என்ன இடம்பெறுகின்றது என்பதைக் கூட கவனிக்காது தமது நேரத்தை வீணடிக்கின்றனர்.

சமூக சீரழிவுகள் ஏற்பட பெரிதும் காரணமாக வலைத்தளங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக அறிமுகமற்றவர்கள் நண்பர்களாவதும், போலியான தகவல்கள் மூலம் உறவுகளை ஏற்படுத்துவதும் இலகுவில் இடம் பெறுகின்றது. இந் நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக காதல், நட்பு, திருமணம் எனும் நிலைகளுக்கு சென்று ஏமாற்றத்தை சந்திக்க நேர்வதுடன் பண ரீதியான மோசடிகளும் இடம்பெறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இது இலவசமாகவும் இலகுவான முறைகளை கொண்டிருப்பதாலும் ஒருவர் ஓரு சமூகவலைத்தில் ஒன்றுக்குமேற்பட்ட கணக்கினை உருவாக்கமுடிவதுடன் ஒரே நேரத்தில் அவற்றைப் பாவிக்கக்கூடியதாகவும் உள்ளது. பெரும்பாலும் அவை போலியானதாகவே இருக்கின்றது. உதாரணமாக் இலங்கையில் மொத்த இணையப்பாவனையாளர்களில் 80.29% இனர் பேஸ்புக்கினைப் பயன்படுத்துகின்றனர். . குறிப்பிட்டுச்சொல்வதானால் மில்லியன் கணக்கான புதிய விடயங்கள் 24/7 மணிநேரமும் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் எழுத்தாகவோ, படமாகவோ, காணொளியாகவோ பரிமாறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சீனா, ஈரான் வடகொரியா போன்ற சில நாடுகளைத்தவிர ஏனைய நாடுகளில் இவை பாவனையில் உள்ளது. அதேநேரம் அவர்கள் தங்களுக்கென்று புதிய செயலிகளை உருவாக்கிவைத்துள்ளார்கள். இதனால் பொதுவெளிகளில் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகின்றது.

இணையப்பாதுகாப்புக்கான தேசிய நிலையத்தின் அறிக்கையின்படி 2018 ம் ஆண்டு இறுதியில் 3685 சமூக வலைத்தளங்கள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 829 சம்பவங்கள் போலி பேஸ்புக் கணக்குகளால் ஏற்பட்டவை. 416 சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட படங்களை பயன்படுத்திய துஸ்பிரயோகங்கள். மற்றும் 17 ஆபாச வீடியோக்கள் தொடர்பானவை. 7 பதிப்புரிமை தொடர்பானது.

ஒருவர் இவற்றைப் பயன்படுத்தி தனது பதிவுகள் மற்றும் எழுத்துக்களைக் வெளிக்கொண்டுவந்தாலும். அதை இன்னொருவர் திருடி தங்களுடையது போன்று வெளியிடுவதால் பதிப்புரிமை தொடர்பான பல பிரச்சனைகள் எழுகின்றது. ஆனால் 2009 இறுதியில் அல்லது 2010 இல் இவை 80க்குள்ளேயே இருந்துள்ளது. 

யு டியுப் மூலம் வீடியோக்களை இலகுவில் பார்வையிட முடிகின்றது. ஆபாச காணொளிகளை பார்வையிடும் இளைஞர்கள் அதன் மூலம் தம் பாதையில் தடுமாறி செல்லும் வாய்ப்பு ஏற்படுகின்றது. சமூக வன்முறைகள் ஏற்படுவதற்கு காரணமாக வலைத்தளங்கள் காணப்படுகன்றன. இனத் துவேச கருத்துக்கள், வன்முறைகளைத் தூண்டும் கருத்துக்கள் விரைந்து பரப்பப்படவும் அதன் மூலம் வன்முறைக் குழுக்களை ஒன்றிணைத்து வன்முறைச் சம்பவங்களை ஏற்படுத்தவும் இவை துணை செய்கின்றன. குறிப்பாக இலங்கையில் கண்டி, தெல்தெனிய போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு சமூக வலைத் தளங்களே பெரிதும் காரணமாகும். இதனால் வரலாற்றில் முதல்தடவையாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

அதாவது தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் ஹோட்டல் ஒன்றில் பெரும்பான்மையினத்தைச்சேர்ந்த ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் கருத்தடை மாத்திரை இடப்பட்டதாக காணொளி பரவியது. ஆனால் அந்த கடை உரிமையாளர், மற்றும் அரச ஆய்வாரள்களினால் அது கோதுமைமா என கூறியும், அந்த காணொளி மிகவும் வேகமாக பரவியிருந்தது. இது மாசி 2018 இல் நடைபெற்றது. பங்குனி வரை நீண்டிருந்தது.

பின்னர் திகண பிரதேசத்தில் மதுபோதையில் இருந்த முஸ்லீம் இளைஞர்களால் தாக்கப்பட்டு சிங்கள முதியவர் ஒருவர் மரணமடைந்தார். தொடர்ந்து முஸ்லீம் மதத் தலைவர்களதல் இந்தப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மரணவீட்டுக்கு உதவிகளும் வழங்கியிருந்தார்கள். மீண்டும் பொதுபலசேனா களத்தில் வந்து போலியான செய்திகளை பரப்பி இளைஞர்களைத் தூண்டி மதக்கலவரமாக மறியிருந்தது. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. திருப்பி அவர்களைத் தாக்க முடியாத முஸ்லீம்கள் தமிழர்களை தாக்க ஆரம்பித்தார்கள். இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் சமூக வலைத்தளங்களை முற்றாக தடைசெய்து அவசரகால நிலமையை அறிவித்தது. 1995 இல் வர்த்தகமயப்படுத்தப்பட்ட இணையமானது அறிமுகப்படுத்தப்படதிலிருந்து இதுவே முதல்முறை.

இந்த நிகழ்வுக்கு அந்தக் காணொளி மேலும் எண்ணெய் ஊற்றியது போல அமைந்திருந்தது. வட்ஸ்அப் குழுவில் செய்திகள் பகிரப்பட்டு ஒருங்கிணைந்து விடயங்களைப் பரிமாறி இத்தாக்குதல் நடைபெற்றது. போலி தகவல் அல்லது செய்தி உண்மையை விட மிக வேகமாகப் பரவக்கூடியது. ஏற்கனவே குளம்பியிருக்கும் இனங்களிடையே இவை மேலும் வெறுப்பினை ஏற்படுத்தும். 

இதன்பின்னராக சமூகவலைத்தளங்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பேஸ்புக் வன்முறையான விடையங்களை பதிவிடமுடியாதபடி செய்தது. சமூக நிலைகளுக்கு (Community Stranded) விரோதமானது என சிலவற்றைத் தடை செய்தது, 500க்கு மேற்பட்ட போலிக்கணக்குகளை நீக்கியுள்ளது. தவறான செய்திகள் பயப்பட்டால் அவை மற்றும் கணக்குகள் நீக்கப்படும் என்ற சட்ட ஓழுங்குகளைக் கொண்டுவந்துள்ளது. வட்ஸ் அப் ஐந்து நபர்களுக்கு மேல் ஒருவிடையத்தை மீள அனுப்ப முடியாதபடி கட்டுப்படுத்தியுள்ளது . 

தவறான கருத்துக்கள், தகவல்கள் விரைவில் பரவுவதற்கு காரணமாக சமூக வலைத்தளங்கள் அமைகின்றன. இப்போது இரண்டாவது தடவையாக யுரியுப் உட்பட அனைத்து வலைத்தளங்களும், ஏப்ரல் 21ம் நடந்த ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து முடக்கபப்பட்டிருந்தது.

தனி நபர், நிறுவனம் என்பன தொடர்பில் அவதூறுகளைப் பரப்பவும் அவற்றை உண்மை என நம்பி பிறர் செயற்படவும் இவை காரணமாகின்றன. இதன் தொடர்ச்சியாக உயிரிழப்புக்கள் தவறான முடிவுகளுக்கு கூட செல்லும் நிலை ஏற்படுள்ளது.

நட்பு, மண உறவு முறிவிற்கும் சமூக வலைத்தளங்கள் வாயப்பை ஏற்படுத்துகின்றன. சமூக வலைத்தளங்களில் ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்களால் ஏற்படும் தவறான புரிதல்கள் இவ் உறவுகளில் கசப்புக்ளை உண்டாக்கி விடுகின்றன. இளைஞர்களை தவறான பாதைகளுக்கு கொண்டு செல்வதில் சமூக வலைத்தளங்களின் பங்கு அளப்பரியது.

இவ்வாறாக மனிதனது தேவைகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் இன்று தேவைகளையும் தாண்டி பொழுது போக்கு சாதனமாக மாறி உள்ளன. இருப்பினும் மனிதனுக்குப் பலவேறு நன்மைகளையும் இவை ஏற்படுத்த தவறாததோடு ஒரு புறம் தீமைகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றில் உள்ள பாதக தன்மைகளை இனங் கண்டு ஒவ்வொருவரும் செயற்படுவார்களானால் தீங்கேதும் இல்லை. 

வினைத்திறனான முறையில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துதல்.

தவறான விடையங்கள் எவ்வாறு ஏற்படுகின்றது, பாதக தன்மைகள் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை இனங்காணவேண்டும். பொதுவாக இணைய வெளியில் தோன்றும் கணக்குகள் கடவுச்சொற்களினுடாகத்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குள் புகும்போது எம்மைப்பற்றிய தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. 35% ஆனவர்கள் அனைத்துக்கணக்குகளுக்கும் ஒன்றையே கடவுச்சொல்லையே பயன்படுத்துகின்றார்கள். அவர்களில் 31% ஆனோர் உலாவிகளில் சேமித்துவைத்துள்ளனர். 36.4% வீதத்தினர் கணக்குகள் ஆரம்பித்தது முதல் ஒன்றையே பயன்னடுத்துகின்றனர்.

இவற்றை விட 39% இணைய பாவனையாளர்கள் தெரியாதவர்கள் அனுப்பும் எந்த கோப்புகளையும் உடனடியாக திறக்கிறார்கள் என NICSA கூறுகின்றது. இதன்முலம் தான் இணையத்திருட்டுக்கள் ஆரம்பிக்கின்றன.

இணையம் தற்போது எல்லாக்கோணங்களிலும் அதாவது வாழ்க்கைமுறை, தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப்பங்களிப்புக்கறில் மிக மிக அவசியமானதொன்றாக இருக்கின்றது. இணையம் இன்றிஏதும் அரசோ, தனியாரோ இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது இணையக்குற்றங்கள் பற்றிய ஒன்றை எமக்கு அறிமுகப்படுத்துகின்றன. இவை சமூக வலைகளில் உள்ள விழிப்புணர்வு தன்மை குறைவாலேயே நிகழ்கின்றது. அதாவது இணையவழி போலிக்கொடுக்கல் வாங்கல்மூலம் கடனட்டை இலக்கங்கள் களவாடப்படுகின்றன. சமூகவலைத்தளங்கில் பகிரும் வயது, குடியியல் நிலமை, விலாசம், விருப்பு வெறுப்புகள் போன்றன மூலம் தகவல் திருட்டு தொடர்புபடுகின்றன.

வலிமையான கடவுச்சொல்லை எப்படித்தெரிவுசெய்யவேண்டும்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஹேக்கர்ஸ் (hackers) என்று சொல்லக்கூடிய இணையதள திருடர்கள், நாம் பயன்படுத்தக் கூடிய wifi  ஊடாக ஊடுருவலாம். நாம் பயன்படுத்தக் கூடிய சாதனமான கணினியோ கைபேசியோ அதை கட்டுப்படுத்தலாம். 

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகேர்பெர்க் அவர்கள், தன்னுடைய பேஸ்புக் கணக்கில் ஒரு புகைப்படம் பகிர்வு செய்திருந்தார். அதில் அவருடைய மடிக்கணினியின் வெப்கேம், மைக் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி இணைய உலகத்தில் பல விவாதங்கள் நடந்தது. தன்னுடைய மடிக்கணினியினை யாராவது ஊடுருவினாலும் வெப்கேம் மற்றும் மைக் மூலமாக எந்த தகவலும் திருடப்படக்கூடாது என்னும்நோக்கத்தில் அவர் அப்படி செய்து இருக்கலாம் என்பது போன்ற விவாதங்கள் அதிகமா பேசப்பட்டது. 

அதற்காக நாம் இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவேண்டுமா? இல்லை ஆனால் நாம் பயன்படுத்தக் கூடிய கணக்கை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். அதனுடைய கடவுச்சொல்லை மிகக் கடினமாக வைத்து கொள்ளவேண்டும். அடிக்கடி மறப்பவராயின் உங்கள் கடவுச்சொற்களை எளிதாகக் காண முடியாத ரகசிய இடத்தில் வைக்கவும். ஆனால் உங்கள் கடவுச்சொற்களை எழுதி வைத்துக்கொள்வது நல்லதல்ல. 

பெரிய, சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகள் சேர்ந்த கடவுச்சொல்லாய் இருக்க வேண்டும். Two-Factor Authentication(TFA) என்று சொல்லக்கூடிய இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை அமைத்துக் கொள்ளவேண்டும். வௌ;வேறு இணைய தளங்களுக்கு ஒரே கடவுச்சொல்லை பயன் படுத்தக் கூடாது. முக்கியமாக உங்கள் கடவுச்சொல்லை தனிப்பட்டமுறையில் வைத்துக்கொள்ளவும்.

கணக்குகளை பாவிக்கமுன் பாதுகாப்பான உள்நுழைவுப் பக்கங்கள் எது என்பது தொடர்பான குறைந்த அறிவுவேண்டும். உங்கள் கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யும் முன்பாகவே, கடவுச்சொல் எச்சரிக்கை அம்சமானது, போலியான உள்நுழைவு பக்கங்களைக் கண்டறிந்து உங்களை எச்சரிக்கவும் முயற்சிக்கும். இவ்வாறு செய்வதற்கு, கடவுச்சொல் எச்சரிக்கை அம்சமானது, நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு பக்கத்தினையும்; சோதித்து, அது ஒரு பாதுகாப்பான உள்நுழைவு பக்கமா? போலியா என்பதைச் சோதிக்கும். அதனை அறிந்து உள்நுளைந்தால் அங்கு அழகான உலகம் இருக்கும். அது சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமாகும்.


http://www.trc.gov.lk/2014-05-13-03-56-46/statistics.html
https://www.slideshare.net/DataReportal/digital-2019-global-digital-overview-january-2019-v01
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா